Friday, August 18, 2006

காய்ந்த சுவடுகள்

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை


பாறை உயிரற்றது
பாலை மணல் உயிரற்றது
காய்ந்த முட்களும் உயிரற்றவை
பிணங்களே பாதையானால்
மனங்களுக்கு மதிப்பேது ?

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை

என் கண்கள் கரைந்திருக்கின்றன
என் கால்கள் தளர்ந்திருக்கின்றன
என் கைகள் காற்றில் வெறுமனே துழாவுகின்றன
என் இதயத்துடிப்பை அடிக்கடி நானே
சோதித்துப் பார்க்கிறேன்

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை

என் உயிர் வலிக்க ஒப்புக்கொள்வேன்
ஆனால் -
நான் சிரித்தாலே மலர்ந்து விடும்
என் தோட்டப்பூக்கள்
பொசுங்கி விடப் பொறுப்பதெப்படி ?
பொறுத்தேன்

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை

பாறையில் கால் இடறி
பாலையில் விழுந்தேன்
விழுந்த இடமெல்லாம்
காய்ந்த முட்கள்
என் ஆறறிவில் ஓரறிவு
இடம் பெயர்ந்து போனது - பாறையால்.
என் சிறகுகளெல்லாம்
சருகாயின - பாலையால்.
என் இதயத்தின் எல்லா அறைகளும்
அறுபட்டு போயின - முட்களால்.
பிணமானேன் நான்,
பிணங்களால் நான் பிணமானேன்.

எழுந்துவிட முயற்சித்ததுண்டு - ஆனால்
எழும்போதெல்லாம் வீழத்தான் வேண்டுமென்றால்
வீழும்போதெல்லாம் உயிர்கொண்டு எழுவானேன் ?
பிணமாய் கிடந்தேன்

திடீரென்று -
ஒரு பாதம் என் மீதேறிச் சென்றது
எதிர்பார்க்கவே இல்லை -
என் உடலெங்கும்
இரத்தச் சுவடுகள்

சுவடுகளின் சொந்தக்காரன்
சுருக்கமாய் சொன்ன வார்த்தைகள் -
"கரைகின்ற கண்களுக்கு
காட்சிகள் தெரிவதில்லை.
நிமிர்ந்து நில் - உலகம் தெரியும்.
தெளிந்து நில் - உலகம் புரியும்"

ஏதோ புரிந்தது போல் எழுகிறேன்
மீண்டும் அழுகிறேன் - ஆனால்
இம்முறை எழுகின்ற கண்ணீரை
இதயத்துள் சேமிக்கின்றேன்.
ஆதலின் தெளிவான கண்கள்.

என் முன்னால் பார்க்கிறேன்
தூரத்துப் பச்சை தெளிவாய் தெரிகிறது.
ச்ற்றே திரும்பிப் பார்க்கின்றேன் -
என் கால் இடறிய கற்களெல்லாம்
கற்சிலைகளாய் உருப்பெறுகின்றன.
என் பாலை மணல் முகடு
நிலா மழையில் நனைகிறது.
என் முட்களைச் சுற்றியெங்கும்
முகம் மலர்ந்த ரோஜாக்கள்.

என் நெஞ்சத்தின் ஆழம் வரை
அப்பிக்கிடந்த ஈரச்சுவடுகள்
காய்ந்திருந்தன.
இதோ தயாராகி விட்டது -
இன்னொரு இரத்தச் சுவடு.


/1997

Notes:
If I remember correctly, this is my first kavidhai. It wasn't easy :)

Wednesday, August 16, 2006

தென்றல் வரும் வேளை

உன் பாதம் தன் மேல் பட்ட சந்தோஷத்தில் உற்சாகக் கூச்சல் போட்டிருக்க வேண்டும் அந்தப் பாதை. உன் காலடி ஓசையை இங்கிருந்தே நான் கேட்கிறேன். இதோ, மிக அருகில்.

இன்னும் சற்றைக்கெல்லாம் என் மனக்கதவை நீ வந்து தட்டப் போகிறாய். உன்னை வரவேற்கத் தயாராகிறேன். என்னவெல்லாம் செய்யப் போகிறாய் நீ ?

உனக்கு சிரமம் தராமல் இப்போதே என் கதவுகளைத் திறந்து வைத்துவிடவா ? இதுவரை அப்படிப் பழக்கமில்லை எனக்கு. இருந்தாலும் இப்போது கதவுகளை நோக்கி ஓடுகின்றேன்; அவற்றை திறக்க எத்தனிக்கின்றேன் - பொறு, பேசலாம்.

உன்னை இதற்கு முன் நான் பார்த்ததில்லை - எப்படி இருப்பாய் நீ ? என்ன பெயர் ? நான் ஒரு பெயர் வைத்தேன் உனக்கு; சொல்கிறேன்.

உன்னைப் பார்த்ததில்லையே தவிர, உணர்ந்திருக்கின்றேன். பெருங்கூட்டத்தில் மிக எளிதாக நான் தனிமைப்படும்போது, சற்றே நான் மனச்சோர்வு அடைவதற்குள், ஓடி வந்து என்னோடு கைகோர்த்துக் கொள்கிறாய்.

இரயில் பயணத்தில் மழைச் சன்னலில் கவிதை எழுதி முடிக்க, அதை எனக்கு வாசித்துக் காட்டுகிறாய்.

பச்சைக்கம்பளப் புல்வெளியில் வாழ்க்கையே புரிந்தது போல் மனம் விரியும் பொழுது, அருகினில் அமர்ந்து கொண்டு என் தோளோடு தலை சாய்த்துக் கொள்கிறாய்.

நிசப்தச்சந்தடியில் மனதெல்லாம் பரபரக்க நினைவெல்லாம் திசை தொலைத்துத் தடுமாறும்போது, என் மேல் விழுந்த ஒற்றைப் பூவில் பேரமைதி தந்து விடுகிறாய்.

இப்படியாக, உன்னைப் பார்த்ததில்லையே தவிர, உணர்ந்திருக்கின்றேன். எங்கோ இருந்தாலும் என் மனத்தின் உள் உணர்வை அறிந்தவளாய், அவற்றின் உருவம் தாங்கி வருவாயா ?

நீ வந்து சேரும் இடம் - ஒரு பூந்தோட்டம், இருக்க வேண்டிய இடம். இங்கு தான் நெடுங்காலம் நான் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தேன். நடப்பதெல்லாம் என்னவென்று புரிந்து, ஏன் என்று புரியாத வரையில் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தேன்; அது புரிந்ததும், நிறுத்திக் கொண்டேன்.

பூக்களுக்காக ஏங்காமல், வேர்களைப் பார்த்த வைராக்கியத்தில் நான் வியர்வை சிந்தத் தொடங்க, அவற்றில் பூத்தவை தான் - வரவேற்பறையில் இன்று நீ பார்க்கப் போகும் ஒரு சில பூக்கள். பூக்களின் வாசம் அறையை நிறைத்திருக்க, வேர்களின் இறுக்கம் மட்டும் இன்னும் நீங்காமல் மனதில்.

உன் பிள்ளைமுகச் சிரிப்பில், என்னைப் புரிந்ததை எனக்குச் சொல்லும் உன் விழிகளில், உன்னைப் புரிந்ததை நான் உனக்குச் சொன்ன வெட்கப் பூரிப்பில், நம் அன்பின் நெகிழ்தலில் - இங்கு இன்னும் பல கோடிப் பூக்கள் பூக்கச் செய்யலாம். அன்று வரும் தென்றல், நம் தோட்டப்பூக்களின் தலைகோதி விளையாட.

இப்போது கதவு தட்டப் படும் ஓசை கேட்கிறது. மெதுவாய் சென்று கதவுகளைத் திறக்கின்றேன். கண்மணீ !

/30 June, 2006.

Tuesday, August 15, 2006

பிரிவு - 1

பிரிவென்ற பேதைமையை
திருத்து.

ஏனெனில்
உன்னையும் தான்
எடுத்துப் போகிறேன் -
என்
விழித்திரை ஓவியமாய்.

/2001

பிரிவு - 2

பிரிவு தான் இது
பிரிந்து போ

என் விழிகளுக்கு
எட்டாத தொலைவில்
தொலைந்து போ

உன் உலகில்
உன்னைப் பூட்டிக் கொள்
என் பிறந்த நாளை மற
எனக்குப் பிடித்ததெல்லாம் மற
என்னையும் மற

ஆனால்
என்றேனும் என் நினைவுச்சறுக்கத்தில்
விழுந்துருண்டு
நான் மூர்ச்சிக்கையில்
உன் பெயரை மட்டும்
உச்சரிப்பேன்

அன்று மட்டும்
மறக்காமல்
உன்னை அனுப்பி வை.

/2001

கனவுகள் தேவை

நிஜம் - ஒரு முரடன்
அவன் வலியவன்

நான் சிரித்தால்
அவன் சொக்கிவிடப் போவதில்லை
நான் அழுதால்
அவன் கரைந்துவிடப் போவதில்லை
அவன் - ஜடம்.

நான் விரும்பி
அவனை அழைத்ததில்லை
நான் விரும்பினாலும்
அவன் போவதில்லை
அவனை போகச் சொல்லியும் பயனில்லை
அவன் - செவிடன்.

சாதுவைப் போல் என்னிடம் நடிப்பான்
கைபிடித்தென்னை அழைத்துச் செல்வான்
பூக்களைக் காண்பிப்பான்
என் மனதை இழுத்து வந்து
அதன் மேல் இருத்தி வைப்பான்
சில நாழிகை கூட கழிந்திருக்காது
எங்கிருந்தோ முள்ளெடுத்து
பூக்களைக் கிழித்தெறிந்து
"போகலாம் வா" என்பான்.

ஏதேதோ எடுத்து வந்து
எல்லாம் என்னிடம் தருவான்
எனக்கும் சிறகுகள் கொடுத்து
வானத்தை விரித்து வைப்பான்
மறந்தும் நான் சிரித்து விட்டால்
என் விழிகளுக்கு சுமை கொடுத்து
உரக்கக் கூச்சலிடுவான்.

அவன் மூடன் -
எனைத் தோற்க வைப்பான்.
துவண்டு நான் கிடக்கையிலே
மீண்டும் எனைத் தோற்க வைப்பான்.

உணர்வுகள் ரணமாயின
மருத்துவனாய் நடித்தான் -
வடு கூட வலி சொன்னது.

எத்தனை நாள்,
இன்னும் எத்தனை நாள் இவனோடு ?
முடிவெடுத்தேன்
நிஜத்தை என் எண்ணம் போல் செதுக்கி
சின்னச் சின்னக் கனவுகளில்
நிறைத்து வைத்தேன்.
கனவுகளைப் ப்ற்றிக் கொண்டேன்.

நிஜத்தோடு போராட
நிஜத்தோடு போராட
இன்னும் கனவுகள் தேவை.

/1999

இருத்தல்

உயிர்த்திரு உணர்வே உயிர்த்திரு
காலின் கீழே உலகம் நழுவும்
விரித்தால் உதிரும் இருகைச் சிறகும்
விழிநீர்த்திரளாய் விழியும் வழியும்
கைப்பிடி பொருளும் காற்றில் கரையும்
நிலையில் மருண்டு நினைவும் துவளும்
இருந்தும் நீயும் -
உயிர்த்திரு உணர்வே உயிர்த்திரு!

பொறுத்திரு மனமே பொறுத்திரு
கனவைக் கொளுத்தி காலம் சிரிக்கும்
விடியும் பொழுதும் இரவாய் தொடரும்
உதறும் உள்ளம் உறவாய் இருக்கும்
நினைவுப்பையை முட்கள் நிரப்பும்
உன்னைச் சிரிக்கும் ஊரும் பேரும்
இருந்தும் நீயும் -
பொறுத்திரு மனமே பொறுத்திரு!

விழித்திரு உயிரே விழித்திரு
நீ சொன்னால் மட்டும் உலகம் சுழலும்
விடுக்கும் வார்த்தை தலையாய் அசையும்
ஊரைக் கூட்டி மேடை மெச்சும்
உறவால் வீட்டின் அறைகள் நிறையும்
பூக்கள் சூழ்ந்து இனிக்கச் சிரிக்கும்
இருந்தும் நீயும் -
விழித்திரு உயிரே விழித்திரு!

/2004

கல்

கல் - இதன் மேல் காக்கை
இன்றும் எச்சமிட்டது.
ஆடு மேய்ப்பவன்
கடந்து செல்லும் போது
கழியால் ஓங்கி அடித்தான்.
நேற்று பெய்த மழைக்கு மிச்சமாய்
ஒட்டிக்கிடந்த ஈரச்சுவடுகள் காய்ந்திருக்க
கரையாமல் கரடுமுரடாய்
கல்.

உணர்வுகளின் வாசம்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.
காற்றோடு மரங்கள் பேசுவதை
கவனித்துப் பழக்கமில்லை.
இது கல் - வெறும் கல்.
இதன் உடைமை - வெறுமை.

திடீரென்று பூக்களெல்லாம்
மொத்தமாய் திரும்பிப் பார்க்கின்றன -
நீ வருகிறாய்.

அருகினில் அமர்கிறாய் -
உன் சுவாசம் பட்ட வெப்பம்
ஏனோ உறைக்கிறது.

காற்றினில் உன் கூந்தல்
கையெழுத்திடுகிறது -
விழித்துக் கொள்கின்றன கண்கள்.

சரம்சரமாய் சிரிக்கிறாய் -
செவிகள் திறந்து கொள்கின்றன.

பேச ஆரம்பிக்கிறாய் -
மரங்களையெல்லாம்
மெளனிக்கச் சொல்கிறது கல்.

அதிசயமாய் வந்த வெட்கத்தில்
ஏதோ உளறி வைக்கிறாய் -
சிரிக்கவும் செய்கிறது கல்.

உன் கண்கள் பனிக்கின்றன -
கரங்களை செதுக்கிக் கொள்கிறது கல்.

காற்றினில் விழுந்து விட்ட
உன் பூக்களைத் தாங்கிப் பிடிக்கிறது -
மென்மையாகிறது கல்.

ஏனோ நீ வந்த வழியே
சொல்லாமல் போகிறாய்.
நீ விட்டுச் சென்ற வாசத்தை
பூக்களெல்லாம் சிறைபிடிக்க -
உன் காலடி ஓசையை
காற்று வந்து கொண்டு செல்ல -
எல்லாம் போகிறது.

விரக்தியில்
சிரிக்கிறது கல் - யாருக்கும்
செவியில்லை.
அழுகிறது கல் - யாருக்கும்
விழியில்லை.

மீண்டும் மரங்கள் பேச ஆரம்பிக்க
மெளனிக்கிறது கல்.

காக்கை வந்து எச்சமிடுகிறது.
அதோ,
ஆடு மேய்ப்பவனும்
திரும்பி விட்டான்.

கல் நெஞ்சமடி உனக்கு.

/2000

Monday, August 14, 2006

எங்கே போகின்றாய் ?

பழகிப்போன யுத்தக்களத்தில்
இன்றும் இன்றும் விழிக்கின்றேன்
இமையாய் துடிக்கும் இதயம் தேடி
மீண்டும் மீண்டும் தொலைகின்றேன்

என் கண்கள் கனக்கும் காலப்பொழுதில்
கன்னக்குழியோடு வருகின்றாய்
ஒட்டடை கோர்த்த மயிலிறகாக
கொட்டிக் கிடக்கும் நினைவெல்லாம்
எடுத்துக் கொடுத்துப் போகின்றாய்

நினைவுச்சுகத்தில் உறங்கும் மனது
விழித்த உடனே உன்னைத் தேடும் -
எங்கே எங்கே போகின்றாய் ?

/2001

கண்மணிக் கவிதைகள் - 2

தூக்கம் கலைந்த ஒரு பின்னிரவில்
இதழ்கள் குவிந்துறங்கும் உன் முகப்பூவை
இமைக்காமல் பார்த்திருப்பேன் -
கள்ளப் புன்னகை சிந்தி
இன்னும் நீ சிவந்திருப்பாய்.

வேல்விழியோ கூர்விழியோ
சொல்மொழியோ கள்மொழியோ என்றெல்லாம்
கவிதைப் பிதற்றல்கள் செய்வேன் -
மெச்சியென் பொற்கிழியாய் தருவாய்
தலையில் குட்டும் கன்னத்து முத்தமும்.

சேர்த்து வைத்த உன் சிரிப்பாலே
நிரம்பி நான் வழிந்திருக்க இன்றிந்தப் புதுச்சிரிப்பை
எங்குதான் வைப்பதென்பேன் -
சொன்னாலும் கேளாமல்
இன்னுமொன்றைச் சிரித்து வைப்பாய்.

தேக்கி வைத்த ஒளியெல்லாம்
வானிறைக்கும் நிலவிருக்க என் நெஞ்சத்தின்
முள்வலிகள் சொல்வேன் -
கண்ணீர் ஒரு துளி தருவாய் போதும்
என் காயங்கள் வடுவின்றி ஆறும்.

/2004

இளமைக் கனவுகள்

நித்தம் நடத்தும் வாழ்க்கைப் போரில்
காகிதப் பணத்தை
ஜெயிப்பதற்கே
போரிட்டு மடிகின்றன -
என் எல்லா நேரங்களும்.

தப்பிப் பிழைத்த
சில நிமிடத்துளியில்
போர்க்கள ஓலம் துறந்து
அமைதிக்காய்
மனது தவிக்கையில் -

ஓடி வந்து
என் மார்பில் சாய்ந்தபடி
தேம்பி அழுகின்றன -

என் இளமைக்கால
இனிமைக் கனவுகள்.

/2002

தனிமை

யாருமில்லாத தனிமை.
நிசப்தம்.

வாய்ப்புக் கிடைத்ததும்
கட்டவிழ்ந்து கொள்கின்றன
என் நினைவுகள்.

ஜெயித்தவையெல்லாம்
கூடிக் கும்மாளம் போட
அடிபட்ட மீதம்
அலறித் தவித்திட

செவிகளை மூடுகின்றேன் -
தனிமை இரைச்சல்
தாளாமல்.

/2000

கண்மணிக் கவிதைகள் - 1

வழிகின்ற கண்ணீரின்
கன்னத்து வழித்தடத்தை
விரல் துளியால்
துடைக்கும் -
மழை.

உடையெல்லாம் சலசலக்க
உடலோடு கட்டிக் கொண்டு
உள்ளம் வரை
வருடிச் செல்லும் -
தென்றல்.

வாழ்கைவழித் திருப்பத்தில்
தொலைத்து வைத்த சிரிப்பெல்லாம்
அள்ளி வந்து
இதழ் நிறைக்கும் -
மழலை மொழி.

நினைவுகளின் சுமை அழுத்தி
இறுக்கம் கண்ட
மனதெல்லாம்
சட்டென்று சிறகாக்கும் -
பூக்கூட்டம்.

இவையோடு இருக்கும் போது
எங்கோ நீ இருந்தாலும் -
உன்னை உணர்கின்றேன்
எந்தன் கண்மணியே !

/oct, 2005

நன்றியுரை

நன்றி என் நண்ப,

உணர்வோடு ஒட்டாத
வெறும் சப்தங்களையே
வார்தைகளாய் நம்பி
நான் தலையசைத்துக்
கிடந்த போது -

நீ தான் நீ தான்
கற்றுத் தந்தாய்

சில ஆழமான மௌனங்களின்
அழுத்தமான வார்த்தைகளைப்
புரிந்து கொள்ள.

நன்றி என் நண்ப,

யாரோ தந்த தொடக்கத்தில்
காற்றிலே வரைந்ததையெல்லாம்
கனவிலே
நான் வைத்த போது

நீ தான் நீ தான்
உணரச் செய்தாய்

என் ஓலைக்குடிசை வழியே
ஊடுவி வந்து விழும்
ஒற்றை ஒளிக்கற்றையின்
வெப்பத்தை.

நன்றி என் நண்ப,

பூக்களையே பார்த்துப் பார்த்து
அழகை நான்
வியந்த போது

நீ தான் நீ தான்
காணச் செய்தாய்

ஏதோ ஓர் ஆழத்தில்
எங்கோ முடியும் பயணத்தில்
தன்னைச் சிதைக்கும்
வேர்களின் வியர்வையை.

நன்றி என் நண்ப,
நீ தான் என் சொந்தம்
நீ தான் என் சொத்து
உன் பெயர் -
சோகம்.

/1999

கடிதம்

மளிகைபாக்கி வாடகைபாக்கியின்
ஏச்சுப்பேச்சையும்
உன்னைப் போலவே நைந்து போன
உன் சேலையின்
சமீபத்திய கிழிசலையும்
உன் பழைய இருமலையும்
மறைத்துக் கொண்டு
கடிதத்தில் எழுதுகிறாய் -
நலமாக இருப்பதாக.

வாராத தண்ணீருக்கு
வாடி நிற்கும்
வெற்றுக் குடமாய்
தினந்தினம் வேலைக்குப் போராடி
பாதி வயிற்றோடு
கிறுகிறுத்தாலும்
பதிலுக்கு நானும்
எழுதுகிறேன் அம்மா -
நலமாகவே இருப்பதாக.

/2001

அஞ்சலி

மரத்தாயின் மடிமண்ணில்
மடிந்திருக்கும் - பூமக்கள்.

இரக்கமில்லா அவசரக்கால்களில்
மிதிபடும்
அதன் சடலங்கள்.

சோகச் சொல்லெடுத்து
அஞ்சலிக் கவிதை வடிக்கையில்
கவனித்தேன் -
நசுங்கிய இதழ்கள்
என் கால்களிலும்.

வெட்கி மரித்த
என் கவிதைக்கு
அஞ்சலியாய் வீழும் -
இன்னும் சில
பூக்கள்.

/2001