Monday, January 22, 2007

ஆசுவாசம்

கண்களை இறுக்கமூடி
கைகளை விரித்து
கால்களை உதைத்துக் கொண்டு
வீறிட்டு அழத் துவங்கிவிட்டது
குழந்தை.

பசியினாலா
பரிட்சயமில்லா முரட்டு முகங்களின்
அன்பில்லாக் குரல் கேட்ட
பயத்தினாலா
இனம் புரியாத வலிகளை
வார்த்தைகளில் சொல்லத் தெரியாத
இயலாமையினாலா

யாருக்கும் தெரியவில்லை.

எங்கோ இருந்த நீ
அழுகுரல் கேட்டதும்
கண்ணீர் மல்க ஓடி வந்து
இருகைகளில் குழந்தையை வாரியெடுத்து
முத்தமிட்டு மார்போடு அணைத்துக் கொள்கிறாய்.

தன் பிஞ்சுக்கரங்களை
உன் கழுத்தோடு கட்டிக்கொண்டு
சாந்தமாய் இப்போது உறங்குகிறது
என் மனதும்.

/22nd Jan, 2007

Tuesday, January 9, 2007

காத்திருத்தல்

விழுந்த மழைத்துளிகள்
மேகம் சேர்ந்து
மீண்டும் கலைகின்றன

பூக்கள் குவிந்து மொட்டாகி
கிளையோடு விதைக்குள்
புதைகின்றன

எழுதிவைத்த என் கவிதையும்
விரல்வழி புகுந்து
மூளைக்குள் மிச்சமின்றி
தொலைந்து விட
நான் மட்டும்
இன்னும் இருக்கின்றேன்

என்றேனும் உன் கவிதையோடு
நீ இங்கு வரக்கூடும்
மண்வாச மழையோடு
பூங்காடு நனையக்கூடும்

/9th Jan, 2007

Thursday, January 4, 2007

தொலைவு

எத்தனை வருடமாய்
இந்த வேலையில் நான் இருக்கின்றேன்
சம்பளம் எவ்வளவு தருகிறார்கள்
அடிக்கடி என்னை அமெரிக்கா அனுப்புகிறார்களா
வாடகை வீட்டிலா நான் இருக்கிறேன்
நான் வாழும் தெருவில் கார் நுழையுமா
என் தந்தை என்னவானார்
என் உடையில் எடையில்
மேல்தட்டின் பிடிமானம் எவ்வளவு

எல்லாம் அளந்து பார்த்து
எனக்கும் அவருக்கும் உள்ள தொலைவை
எனக்குத் தெரியாமல் சரிபார்ப்பதாய் எண்ணி
நொடிக்கொருதரம் புன்னகைக்கிறார்

ஆனாலும் கடைசி வரை
நான் விரும்பிப் படித்த புத்தகம் எதுவென்று
அவரும் கேட்கவில்லை

இன்னும் நான் அறிந்திராத
அவர் பெண்ணுக்கு
ஒரு கவிதை எழுதியிருப்பதாய்
நானும் சொல்லவில்லை.

/5th Jan, 2007

கவிதையல்ல, பிரார்த்தனை

இறைவா,
நல்ல மனிதர்களை
எனக்கு அடையாளம் காட்டு.
நல்ல மனிதர்களுக்கு
என்னை அடையாளம் காட்டு.

/4th Jan, 2007.

Monday, January 1, 2007

மரபின் கேள்வி

வேர்கள் இல்லாத மரமொன்று
காற்றினில் மிதந்து கொண்டிருக்கிறது

உலுத்துப் போன தன் வேர்களை
வலியை மீறி அறுத்தெறிய நேர்ந்த
அதன் துக்கமோ

எந்த கணமும் நிகழ்ந்துவிடக்கூடிய தன் சரிவை
பலங்கொண்ட மட்டும் எதிர்த்து
தன் தளிர்களை மேலெழுப்பும்
அதன் பிராயத்தமோ

மேகத்திலிருந்து நீர்உறிஞ்சக் கற்று
தன் உயிர்ப்பை நிலைநிறுத்த
அதன் கிளைகள் படும் அவஸ்தைகளோ

உரம் மிக்க அதன் புதுவேர்கள்
பூமி நோக்கி மெதுவாய்
இறங்கிக் கொண்டிருப்பதோ

நம் கண்களுக்கு
தெரிவதே இல்லை

நம்மிடம் இருப்பதெல்லாம்
மரபின் கேள்வி மட்டும் தான் -
வேர்களை இழந்து போய்
விறகுக்கு ஆனபின்னும்
இது பூப்பது யாருக்காக ?

/1st Jan, 2007