Wednesday, September 22, 2010

பேரமைதி

ஒரு கனி
இரு பசி
தெறிக்கும் இரத்தம்

எஜமானன்
அடிமை
இவன் அவனாக
அவன் இவனாக
உருளும் சரித்திரம்

ஒரு பூமி
பல்லுயிர்கள்
அரித்துக் கொண்டிருக்கிறோம்

பசியில்லாத உயிர்கள்
உயிர்களில்லாத பூமி
பூமியில்லாத பிரபஞ்சம்
பிரபஞ்சமில்லாத ஏதோ
பேரமைதியில்
இருந்திருக்கக் கூடும்

பிரபஞ்சம் எப்போது உருவானது
எங்கிருக்கிறோம்
என்ற கேள்வி எழுந்த போது - ஆக
கேள்வியே இல்லாத போதும்
அந்தப் பேரமைதி வாய்க்கக் கூடும்

Thursday, August 19, 2010

எல்லாம் சரியாக அமைந்தவர்கள்

எல்லாம் சரியாக அமைந்தவர்களின்
குடும்பப் புகைப்படத்தில்
அழகான மரவேலைப்பாடமைந்த நாற்காலிகளில்
மூன்று தலைமுறையினர்
கம்பீரமாக வீற்றிருக்கிறார்கள்
அங்கே காலியான அல்லது உடைந்துபோன
நாற்காலிகள் என்று எதுவும் இல்லை

முன்னறிவிக்கப்பட்ட திருப்பங்களோடு
பெரும்பாலும் நேர்கோட்டில் பயணித்து
சுபமென்று முடியும் கதையொன்று
அவர்கள் ஒவ்வொருவர் கையிலும்
வழங்கப்பட்டிருக்கிறது
அங்கே மரணம் கூட
எதிர்பார்க்கப்பட்ட வரிசையில்
நேர்த்தியான விசும்பலோடு நிகழ்கிறது

குளிரூட்டப்பட்ட இரயில் பயணத்தில்
தூக்கத்திற்காக இரவல் வாங்கிய புத்தகம் போல்
அவர்கள் வாழ்க்கைப் புத்தகத்தின்
பளபளக்கும் அட்டைப்பக்கம்
வாசித்துக் கொடுத்துவிடுகிறார்கள்

எதுவுமே சரியாக அமையாதவர்கள் தான்
கசகசக்கும் இரவொன்றில்
மங்கிய வெளிச்சத்தினூடே
களைப்பான கண்கள் கொண்டு
அத்தனை பக்கத்தையும்
படித்துத் தொலைக்கிறார்கள்.

Saturday, June 19, 2010

வெண்தாடிக் கிழவன்

கிழிந்த துண்டு போர்த்தி
தெருவோரம் சுருண்டு கிடக்கும்
இந்த வெண்தாடிக் கிழவன் -
எல்லோராலும்
புறக்கணிக்கப்பட்டவனா ?
அல்லது
எல்லோரையும்
புறக்கணித்தவனா ?

Thursday, June 3, 2010

இருட்டறை

இன்னமும் அச்சுறுத்துகிறது
மனத்தின்
இந்த இருட்டறை

எத்தனை வித்தைகள் கற்றாலும்
இந்த இருட்டு மட்டும்
கண்களுக்குப் பழகவே இல்லை

கிடைத்திருக்க வேண்டிய அரவணைப்பு
சின்ன சின்ன சந்தோஷங்கள்
நடுங்கும் விரல்களுக்கான பற்றுதல்
சில தவறுகளுக்கான மன்னிப்பு
காய மறுக்கும் கண்ணீர் துளிகள்
தொலைந்து போன பருவங்கள்
மறுக்கப்பட்ட கொண்டாட்டங்கள்
நேர்த்தியான புறக்கணிப்பு
துல்லியமான சில சிதைவுகள்

எரியாத சடலங்கள் இறைந்து கிடக்கும்
மயானத்தின் நெடிகொண்டு
மறைந்திருக்கும் என் இருட்டறை

இந்த தூரத்திலும் விழும் ஒரு பார்வை
இந்த ஆழத்திலும் சேரும் சிறு வெளிச்சம்
வரக்கூடுமென்றால்
நான் மன்னிக்கக்கூடும்
இந்த இருட்டறையை
எனக்குப் பரிசளித்தவர்களை

Sunday, May 9, 2010

ஒரு காதல் கதை

ஒரு பெண்
ஒரு ஆண்
அவள் உலகம்

ஒரு ஆண்
ஒரு பெண்
அவன் உலகம்

அவனும் அவளும்
சங்கமிக்கப் பணித்தாள்
ஒரு தேவதை

இரு உலகங்கள்
மோதிக்கொண்ட அதிர்ச்சியில்
அவர்கள் பிறகு மயக்கம் தெளிந்தார்கள்

அவள்
உடைந்த தன் உலகத்துண்டுகளை
தலையணைக்குள் புதைத்துக் கொண்டு
தேவதையை சபித்தாள்

அவன்
உடைந்த தன் உலகத்துண்டுகளை
வெறிகொண்டு
தேவதை மேல் விட்டெறிந்தான்

எல்லாம் தெரிந்த தேவதை
ஒரு குழந்தையை
அவர்களுக்குப் பரிசளித்தாள்

பிறகென்ன
அந்தக் குழந்தையே
அவர்கள் உலகமாகிப் போனது.

Tuesday, February 9, 2010

நினைவுகளை அணைத்தல்

ஒரு மின்விளக்கை
அணைப்பது போல்
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை
நினைவுகளை அணைப்பது.

என் உறக்கத்தடமெங்கும்
குதிரைக்குளம்பொலியாய்
ஒலித்துக் கொண்டேயிருக்கும்
இந்த நினைவுகளை
இறுக்கிப் பிடித்து நிறுத்த
இரவின் வீதியெங்கும்
அதன் பின்னலைகின்றேன்.

நினைவுகள்
எண்ணங்களைப் பிறப்பிப்பதும்
எண்ணங்கள்
நினைவுகளைத் திசைதிருப்புவதுமாக
தொடரும் உங்கள் விளையாட்டை
வேடிக்கை பார்ப்பதைத் தவிர
வேறொன்றும் வழியறியாத நான்
ஒன்று மட்டும் உங்களைக் கேட்கின்றேன் -

ஒரு மின்விளக்கை
அணைப்பது போல்
மிகஎளிதாக இந்த உடல் அணையும் போது

எந்தத் திருவடியில் விழுந்து
நீங்கள் செத்தொழிந்து போவீர்கள்?