Sunday, March 25, 2007

உறுதியானது

நீண்டுகொண்டே செல்லும் இத்தூரத்தை
இதோ இதோ எனத்தேற்றி
இனியும் கடக்க முடியாது

துவண்டு மீண்டும் துவண்டு
தன்னைத் தானே இடறிக்கொள்ளும் கால்கள்
இனியும் என்னை எங்கும் கொண்டு சேர்க்காது

தசைகள் கிழித்து இறுக்கக் கட்டிய கட்டவிழ்ந்து
திசைக்கொன்றாய் தெறித்து ஓட
என்னில் எதுவும் மிச்சமில்லை

அடுத்த அடி நான் எடுத்து வைப்பதென்றால்
நான் பற்றிக்கொள்ள ஒரு பிடியைத் தருவாய்
எனைத் தேற்றியெடுத்து தாங்கிக் கொள்ள
நீ படைத்ததிலே எது உறுதியானதோ
அதை எனக்குத் தருவாய் எனக் கேட்டேன்

பூக்களிலே மெல்லிய பூ இது தான்
இனி இது உன் பொறுப்பு எனத் தந்து
அர்த்தத்தோடு சிரித்துப் போகிறான்

/25th March, 2007

Thursday, March 22, 2007

வெற்றிடம்

எதுவுமே இல்லையென்றாலும்
எதுவுமாகவும் இருக்கலாம் என்பதால்
சாத்தியங்களால் நிறைந்திருக்கும் வெற்றிடத்தில்
இது தான் எனவொன்று வந்த பின்னும்
முகம்வாடி வெளியேறிப்போகும்
அதுவல்லாத அனைத்திற்காகவும்
ஏங்கித் தவித்து தூக்கம் கெட்டவன்
இதுவென்றதும் இல்லாதாகி
எதுவுமே என்றுமே இருக்க முடியாத
வெற்றிடங்களால் நிறைந்த வெற்றிடத்தில்
ஐயோ பாவம் தொலைந்து போனான்.

/22nd March, 2007

Saturday, March 17, 2007

கண்ணுக்குத் தெரியாத மேடை

எல்லா சுதந்திரதினத்திற்கும்
தவறாமல் மேடையேறி
ஆனந்த சுதந்திரம் அடைந்த மகிழ்ச்சியில்
குறுகுறுக்கும் ஒட்டுமீசையை
கம்பீரமாக முறுக்கிக் கொள்வான்
என் பள்ளி பாரதி.

மைதீட்டி திலகமிட்டு அக்காவின் கொலுசணிந்து
'தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடி
நேற்று பழகிய வெட்கத்தோடு
பார்வையாளர் கூட்டத்தில் தன் கண்ணனைத் தேடி
எப்படியும் பரிசோடு தான் திரும்புவாள்
என் சின்ன இராதை.

குச்சிக் கைகளில் அட்டை வாள்சுழற்றி
தன் புஜபல பராக்கிரமங்கள் பேசி
நடிகர் திலகத்து பெருமூச்சுவிட்டு
நாடக முடிவினில் மனம்திருந்தி
கைத்தட்டல் வாங்குவான்
என் முரட்டு மன்னன்.

இன்றோ கண்ணுக்குத் தெரியாத மேடைகளில்
யாரும் காணக் கலைந்திடாமல்
நேர்த்தியாய் போடும் பல வேடங்கள்
அன்று போல் இல்லாமல்
வெறும் உறுத்தல்களையே
பரிசாகத் தருகின்றன.

/17th March, 2007.

Wednesday, March 14, 2007

உங்களுடைய நான்

நீண்டநாள் பயணத்தில்
என்னோடு எனக்கு
மிக நெருக்கமான பழக்கம்.

என்னைப் போலவே என்னை அறிந்து கொள்ள
என்னோடு பயணிக்கும் தேவைகள்
என்றுமே உங்களுக்கு இருந்ததில்லை என்றாலும்
ஆளுக்கொரு விதமாய் அலங்கரித்து
என்னை என்முன் நீங்கள் நிறுத்தும் போது
'அது நான் அல்ல, நீங்கள் தான்' என்று
நான் விழுந்து சிரிக்காமல் சொன்னாலும்
கோபம் வருகிறது உங்களுக்கு.

சரி போகட்டும்
நீங்கள் அறியாத என்னை
நான் விளக்கிச் சொல்லவா என்றால்
நான் அறியும் என்னைவிட
நீங்கள் அறியும் நான்
உங்களுக்குச் சரியாக இருப்பதே
எனக்கு நல்லது என்ற அறிவுரை சொல்லி
புறப்பட்டு விடுகிறீர்கள்.

என்னோடு என் பயணம் தொடர்கிறது
நீங்கள் இல்லாமலே.

/14th March, 2007

Thursday, March 1, 2007

பூக்களை நேசித்தவன் கதை

தன் தாயின் உள்ளங்கைப் பற்றுதலில்
தான் பெற்ற அன்பும் அமைதியும்
பூக்களில் நிறைந்து நின்று
நித்தமும் சிரிக்கக் கண்டு
பூக்களோடு அவன்
தீராத காதல் கொண்டான்.

மனத்தின் வெளிப்பிரவாகமோ
ஆழ்ந்த உள்இடுக்குகளோ
பூக்கள் வேண்டாத இடமே இல்லையென்று
பூமியே பூத்துக் குலுங்க எண்ணி
தன் வீட்டுத் தோட்டத்திலிருந்து
அவன் தொடங்கினான்.

பூக்களின் இதழெங்கும் கவிகள் எழுதி
பூமணத்தில் காற்றோடு கலக்க விட்டான்.

இன்னொரு நாளுக்கான நம்பிக்கை
பூக்களில் மட்டுமே ஒளிந்திருக்கக் கண்டு
பரவசமடைந்த அதே வேளையில் தான்
பூக்களைக் கிழித்துக் குதறி
தின்றுயிர்க்கும் பிராணிகளும்
உண்டென்பதை அவன் அறிந்தான்.

தன் பூக்களைக் காத்துக் கொள்ள
வெறிகொண்டு பிராணிகள் பின்னே
விரட்டிச் சோர்ந்துடைந்து
கண்ணீர் விட்டான்.

பூக்களோடு வாழ நினைத்தவன் அன்றுமுதல்
முட்களைச் சிந்திப்பதிலே
முட்களைச் சேகரிப்பதிலே
வாழ்வைத் தொலைத்துவொரு
முள்வேலி செய்து முடித்து
மாண்டு போனான்.

அவன் செய்த வேலிக்குள் யாரேனும்
இனி பாதுகாப்பாய் பூக்கள் வளர்க்கலாம்.
அன்று பூத்துச் சிரிக்கும் பூக்களிலும்
அவன் எழுதிய கவிகள் இருக்கலாம்.

/1st March, 2007