Friday, January 6, 2012

அப்பாவின் பெட்டி

பெரும்பாலும் உபயோகமில்லாத
பழைய தட்டுமுட்டு சாமான்கள் கிடக்கும் பரணில்
அப்பாவும் இருப்பது போல் தோன்றவே
தனிமையில் ஒருநாள்
அப்பாவின் பெட்டியை பரணிலிருந்து இறக்கினேன்.

திருமணக்கோலத்தில் அப்பா அம்மாவின்
கருப்பு வெள்ளை புகைப்படம்
உள்ளே செல்லரித்துக் கிடந்தது.
பழுப்பேறிய வேஷ்டி
பெரிய காலர் வைத்த சட்டை
அழகான கையெழுத்தில் நோட்டுப்புத்தகம்
சவரம் செய்யும் கத்தி
வெற்று மார்புடன் சிகரெட் புகைத்தபடி
முறுக்கிய மீசையோடு
இளமைக்கால அப்பாவின் ஆல்பம்
எல்லாம் சிதலமடைந்து
சவப்பெட்டியை திறந்தது போல் இருந்தது

எத்தனைதான் வெறுத்தாலும்
மேலேறிய முன் நெற்றியோடு
கண்ணாடியில் தெரியும்
என் முகத்தில்
அப்பாவின் அடையாளம் மிச்சமிருப்பது
ஆறுதலாயிருக்கிறது.


உன் குறுஞ்செய்தி

தடித்த வார்த்தையொன்று
நம்மிடையே வந்து விழ
இறுக்கமான முகத்தோடு
இல்லாத காரணம் சொல்லி
உன் அம்மா வீட்டிற்குப் போகிறாய்

போகட்டுமே என்றிருந்த பிடிவாதம்
இருநாட்களுக்குள் மூச்சடைத்துப் போனது

நீயில்லாத நம் வீடு
என் மீது கோபித்து முகம் திருப்பிக் கொள்ள
சூழ்ந்த வெறுமையில்
நிராயுதபாணியாய் நிற்கின்றேன்

சற்று பார்வை மங்கி
இலக்குகள் தெரியாத தடுமாற்றம்

நிலைகொள்ளாமல் தள்ளாடும் மனது
எங்கோ இருளில் முட்டி நிற்கிறது

இது போதாதென்று இரவெல்லாம்
மோகினிப்பேய்களின் அட்டகாசம்

அங்கென்ன நிகழ்ந்ததோ
ஒரு வழியாக மெளனம் கலைந்து
"சாப்டாச்சா" என்ற ஒற்றைச் சொல்லோடு
வந்து சேர்கிறது உன் குறுஞ்செய்தி

மடை திறந்த வெள்ளம் போல்
மீண்டும் நான் உயிர்த்தெழுந்து
தாயே உன் மடியில் விழுந்தேன்.