Saturday, October 11, 2008

நவீனனின் சிரிப்பு

பொறி கலங்கி தள்ளாடி
பழுப்பேறிய வேட்டி கலைந்து
குடிச்சி நாலுநாளாச்சு சாமீ
பிச்சை கேட்கும் கிழவனை
எப்படி நான்
கடப்பது அப்பா

அடிக்கொருதரம் முன்னகர்ந்து
இதோ சூழ்ந்து கொண்டது அடர்வனம்
முன்பொருதரம் இப்போது
தொலைந்திருக்கிறேன்
வேறு நினைவில்லை

வேர்பிடித்திருக்கும் கவிதையொன்று
தேடி விரைகிறது
ஆழப்புதைந்திருக்கும்
தன் கண்ணீர் துளிகளை

ஏன் எனக்கு?
ஒன்றிலிருந்து ஒன்றொன்றாய்
சர்வமும் விதி
இட்டதை உண்கிறேன்
அல்லது இயலாமை

என்னையே நான்
திரும்பித் திரும்பி பார்த்து
தேங்கி நிற்பதை
இப்போது நான் பார்க்கிறேன் நவீனா
இனியேனும் கால அம்பை
முன்னோக்கி பாய்ச்ச வேண்டும்

சிரிக்காதே நவீனா
சிரிக்கிறான்.

/12 Oct, 2008.

(பி.கு: சென்ற வாரம் காவ்யா பதிப்பகத்தை தேடிப்பிடித்து நகுலன் புத்தகங்கள் வாங்கினேன். நவீனன் தொற்றிக்கொண்டான் :))

Monday, July 28, 2008

பாமரன் கவிதைகள்

பூ நிலவு இரவென்று
அங்கங்கே தெரிந்தாலும்
முழுவதும் வாசித்தால்
இக்கவிதையில் எதுவுமே புரியவில்லை
என்ன செய்வது என்றான்

புரிந்து கொண்டால்
ஏழாவதுஅறிவின் முதுகுப்புறம்
மயிலிறகால் வருடும் சுகம் கிட்டும்
எதற்கும் ஒற்றைக்காலில் நின்று
உச்சிவேளை சூரியனை
மூன்றுமுறை உற்றுப்பார்த்து
பின் கீழிருந்து மேலாய்
வாசித்துப் பார் என்றேன்

குட்டிச் சுவரில் முட்டுக்கொடுத்து
தலைகீழாய் நின்று படித்தால்
பலன் இருக்குமா என்றான்

அதற்கு வீறல் அருவம்
இருப்பு பூதவுடல்
என்றொரு கவிதை இருக்கிறது
தரட்டுமா என்று கேட்பதற்குள்

ஆளைக் காணோம்.

/28th July, 2008

Friday, July 25, 2008

வன்முறை

எதிர் பெர்த்தில் இருவர் மட்டுமே அமர்ந்திருக்க
காலியிடத்தில் வசதியாக கால்களை நீட்டிக்கொண்டு
இரயில் தொட்டிலில்
மற்றுமொரு கவிதைத் தொகுப்பில் ஆழ்ந்திருந்தேன்
நான்கு பக்கங்கள் கடப்பதற்குள்
துர்நாற்றம் வீசத் தொடங்கியது
சிநேகமில்லாத பார்வையோடு
எதிர்புறம் இருந்தவர்
சாக்ஸ் அணிந்த கால்களை
பதிலுக்கு நீட்டியிருந்தார்

மன்னிக்கவும் எனச்சொல்லி
கால்களை இறக்கிக் கொண்டேன்
இருந்தும் துர்நாற்றம் இறங்க
நேரம் பிடித்தது

/26th July, 2008

Sunday, July 6, 2008

பூங்குடில்வாசியாதல்

பூவிதழ்களால் வேயப்பட்டு நித்தமும்
பூரித்து மலர்வதாயிருக்கிறது
உன் பூங்குடில்.

மிதமான மழைபெய்து விடிந்திருக்கும் பொழுது
இதமாக ஒளியூட்டும் சூரியன்
பிள்ளைகள் விளையாடும் புல்வெளிச்சூழல் -
எளிமையான உன் உலகத்தை
எங்கும் நிறைத்திருக்கும்
உயிர்த்துடிப்பாயொரு புன்னகை.

நானோ இரத்தம் மினுக்கும் காயங்களோடு
இழந்தவன் மொழியின் மூர்க்கம் கொண்டு
நிலமதிர வந்து சேர்கிறேன்.

இரக்கமோ கருணையோ சிதைக்காத
இயல்பான உன் வரவேற்பில்
அதுவரை உணர்ந்திராத தோழைமை தருகிறாய்.
என் சொற்கள் விம்மித்ததும்பும் இருட்டறையின்
சாவியை நான் கண்டுகொள்கிறேன்.

தூரப்பிரதேசங்களின் போர்களக் குறிப்புகளை
சரிவிகிதம் காதல் கலந்து
விறுவிறுப்பாய் சொல்லும் கதைகள்
சலிப்பூட்டுவது குறித்தும்
தானப்பிரபுக்களின் புகழ் மேடைக்கூவல்களில்
நசுங்கும் சில எளியோர் உணர்வுகள் குறித்தும்
பின் பூக்களுக்கும் கவிதைக்குமான
தொடர்பு குறித்தும்
இன்னும் எதைஎதையோ நாம் பேசப்பேச
சாளரங்கள் திறந்த வெளிச்சத்தில்
சகமனிதனாய் உணர்கிறேன்.

விடைபெறும் வேளையில் கவனித்து
உன் பூங்குடிலின் அத்தனை இதழ்களிலும்
இப்போது திரண்டு நிற்பது
கண்ணீர் துளிகளா என்கிறேன்.
பனித்துளிகள் எனச்சொல்லி புன்னகைக்கிறாய்.
பூங்குடில்வாசியாகிப் போகிறேன்.

/6th July, 2008.

Sunday, March 30, 2008

அறிவுரை

"புதுமெட்டியின் உறுத்தல்
பழகி விடும்
தினமும் குங்குமமிட்டு தாலியை
கணவன் காண கண்களில் ஒற்றிக் கொள்
அன்போடிரு பக்தியோடிரு
நிச்சயம் மனதில் இடம் பிடிப்பாய்
பிடிவாதமும் எதிர்வாதமும்
பெண்களுக்கு கூடாது
பொறுத்துப் பொறுத்துப் பூமியாள்
அனுசரித்து நடந்து கொள்"
அவளுக்குச் சொல்கிறார்கள்.

"தொப்பையை குறைங்க மாப்ளே சார்"
அவனுக்குச் சொல்கிறார்கள்.

/30th March, 2008.

Friday, March 21, 2008

வழியனுப்புதல்

இருளடர்ந்த இரவொன்றில்
திருமண சொர்கத்திலிருந்து செங்குத்தாய் கீழிறங்கி
பிறந்தகம் வந்துசேர்ந்த என் செல்ல மகள்
தட்டாதே எனச்சொல்லிவிட்டு
தன்னறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள்.

நான் தொட்டுணர்ந்த அவள் பிஞ்சுப்பாதங்களின்
மென்மையை ஒத்திருந்த கனவுகளை
அங்குதான் அவள் வளர்த்திருந்தாள்.

விழிகள் விரட்டியதில் வெட்கம் தின்ற
தன் முதல் தாவணி
வெண்புரவியில் வீற்றிருக்கும்
இராஜகுமாரனின் வருகைக்கான டைரிப்பக்கங்கள்
சில ஓவியங்கள் பாடல்வரிகளோடு கவிதைத்துண்டுகள்
இவை தவிர்த்து
பிணமொன்று அங்கே கண்டதாய்
அலறிக்கொண்டே வெளியோடி வருபவளை
நெஞ்சோடு தாங்கிக் கொண்டு
இன்னபிற இன்னபிற
நியதிகள் சிக்கல்கள் விளக்கி
வழியனுப்பி வைக்கின்றேன்
வெறும் பிரார்த்தனையோடு.

/21st March, 2008.