Sunday, July 6, 2008

பூங்குடில்வாசியாதல்

பூவிதழ்களால் வேயப்பட்டு நித்தமும்
பூரித்து மலர்வதாயிருக்கிறது
உன் பூங்குடில்.

மிதமான மழைபெய்து விடிந்திருக்கும் பொழுது
இதமாக ஒளியூட்டும் சூரியன்
பிள்ளைகள் விளையாடும் புல்வெளிச்சூழல் -
எளிமையான உன் உலகத்தை
எங்கும் நிறைத்திருக்கும்
உயிர்த்துடிப்பாயொரு புன்னகை.

நானோ இரத்தம் மினுக்கும் காயங்களோடு
இழந்தவன் மொழியின் மூர்க்கம் கொண்டு
நிலமதிர வந்து சேர்கிறேன்.

இரக்கமோ கருணையோ சிதைக்காத
இயல்பான உன் வரவேற்பில்
அதுவரை உணர்ந்திராத தோழைமை தருகிறாய்.
என் சொற்கள் விம்மித்ததும்பும் இருட்டறையின்
சாவியை நான் கண்டுகொள்கிறேன்.

தூரப்பிரதேசங்களின் போர்களக் குறிப்புகளை
சரிவிகிதம் காதல் கலந்து
விறுவிறுப்பாய் சொல்லும் கதைகள்
சலிப்பூட்டுவது குறித்தும்
தானப்பிரபுக்களின் புகழ் மேடைக்கூவல்களில்
நசுங்கும் சில எளியோர் உணர்வுகள் குறித்தும்
பின் பூக்களுக்கும் கவிதைக்குமான
தொடர்பு குறித்தும்
இன்னும் எதைஎதையோ நாம் பேசப்பேச
சாளரங்கள் திறந்த வெளிச்சத்தில்
சகமனிதனாய் உணர்கிறேன்.

விடைபெறும் வேளையில் கவனித்து
உன் பூங்குடிலின் அத்தனை இதழ்களிலும்
இப்போது திரண்டு நிற்பது
கண்ணீர் துளிகளா என்கிறேன்.
பனித்துளிகள் எனச்சொல்லி புன்னகைக்கிறாய்.
பூங்குடில்வாசியாகிப் போகிறேன்.

/6th July, 2008.

2 comments:

MSK / Saravana said...

"இன்னும் எதைஎதையோ நாம் பேசப்பேச
சாளரங்கள் திறந்த வெளிச்சத்தில்
சகமனிதனாய் உணர்கிறேன்."

அழகான கவிதை.. :)


ரொம்ப நாட்களுக்கு பிறகு பதிவு போட்டிருக்கிறீர்கள்..
இனி அடிக்கடி எழுதவும்..

MSK / Saravana said...

மிகவும் எதிர்பார்க்கிறேன்..

:)