Tuesday, December 12, 2006

சலிப்பு

கனிந்து சுடரும் சூரியன்.

பச்சையம் நிறைத்த மலைப்பரப்பில்
நரம்பாய் நெளியும் பாதைகள்.

மேகம் மயங்கித் தாழப்பறந்து
தூரத்தெரியும் குடிலில்
குழந்தைகள் குரலோசை.

கள்ளம் பயின்ற தென்றல் ஏதும்
அறியாத பிள்ளையாய் உரசிப்போக
வண்ணக்குழைவின் மிடுக்கோடு
நாணிச் சிரிக்கும் பூக்கள்.

என்றும் தனிமையே
தேடிப் பழகிய மனசு
கவிதை கொஞ்சி பேசத் தொடங்க
கேட்க இன்னோர் உயிரின்றி
இன்று புதிதாய் சலிக்கும்.

/12th Dec, 2006

Tuesday, December 5, 2006

வெளிச்சம் தேடும் வேர்கள்

பிறந்த கணத்திலிருந்தே
ஆழமான இருள்வெளியில்
திசை தெரியாத பயணம்.

மண்படிமங்கள் குடைந்து
பாறைகள் மோதி
நம்மை நூறாய் கிழித்துக் கொண்டும்
விதித்த வழியே தொடர்ந்தோம்.

வெறுமை இறுக்கத்தின்
வியர்வை கசகசப்பில்
நாம் முடங்கித் தவித்திருக்க
நம்மின் மறுபாதியோ
வான்முட்டக் கிளைபரப்பி
பூமணத்தின் கிறக்கத்தில்
தென்றலோடு சல்லாபித்திருக்கிறது.

இனி பொறுப்பதில்லை.
ஒன்றுகூடி முட்டிமோதி
பூமிபிளந்து வெளிப்புறப்பட்டன
வேர்கள்.

பேரிரைச்சலோடு
சரிந்து விழுந்தது
மரம்.

/6th Dec, 2006