Saturday, June 16, 2007

கால ஓட்டம்

தலைதெறிக்க ஓடிவந்து
என் நிகழ்கால அறையின்
கதவு ஜன்னல்களை
கலவரத்தோடு தாளிட்டுக் கொண்டு
வியர்வை வழிய
சாய்ந்து அமர்கின்றேன்.

சற்றும் பாதுகாப்பாய் உணர்வதற்குள்
இருளாய் அறையெங்கும் வியாப்பித்து
இரை கண்ட மிருகம் போல்
என்னை உற்றுப் பார்க்கிறது
இன்னும் இறந்து போகாத
இறக்க மறுக்கும்
இறந்த காலம்.

/16th June, 2007

Friday, June 8, 2007

அந்திமக் காலம்

கண்கள் சிவந்து விரல்நுனி நடுங்க
நரம்புகள் முறுக்கேறி எதற்கெடுத்தாலும்
நீ பற்களை நறநறக்கும் ஓசைக்கு
இன்னமும் பழகாமல்
கூசிப் போகின்றன என் செவிகள்.

எச்சில் ஒழுகும் வேட்கையோடு
போதையில் குழறிக்கொஞ்சி
வெறிகொண்டு என் மேற்படரும் உன் மோகத்தில்
அழுத்தும் தாலிக்கயிற்றை
அதிகவலியோடு உணர்கின்றேன்.

வீட்டின் நாற்சுவர்களுக்குள்
பரந்து விரிந்த உன் வெற்று இராஜியத்தில்
அடிமை என் குரல் எழும்ப
'நான் ஆம்பளைடி' என விழும் அறைக்கு
மரத்துவிட்டன என் மனதும் உடலும்.

இருள்கசியும் உன் பிம்பம் பார்த்து
இதழ்பிதுக்கி கண்கள் மருண்டு என் மடிசாய்ந்து
'நானும் அப்பா மாதிரி ஆம்பளையாம்மா ?'
எனக்குழம்பியழும் நம் பிள்ளையின் சுடுகண்ணீர்
உன் அந்திமக்காலத்தில் உனக்குப் புரியலாம்.

/8th June, 2007