கண்கள் சிவந்து விரல்நுனி நடுங்க
நரம்புகள் முறுக்கேறி எதற்கெடுத்தாலும்
நீ பற்களை நறநறக்கும் ஓசைக்கு
இன்னமும் பழகாமல்
கூசிப் போகின்றன என் செவிகள்.
எச்சில் ஒழுகும் வேட்கையோடு
போதையில் குழறிக்கொஞ்சி
வெறிகொண்டு என் மேற்படரும் உன் மோகத்தில்
அழுத்தும் தாலிக்கயிற்றை
அதிகவலியோடு உணர்கின்றேன்.
வீட்டின் நாற்சுவர்களுக்குள்
பரந்து விரிந்த உன் வெற்று இராஜியத்தில்
அடிமை என் குரல் எழும்ப
'நான் ஆம்பளைடி' என விழும் அறைக்கு
மரத்துவிட்டன என் மனதும் உடலும்.
இருள்கசியும் உன் பிம்பம் பார்த்து
இதழ்பிதுக்கி கண்கள் மருண்டு என் மடிசாய்ந்து
'நானும் அப்பா மாதிரி ஆம்பளையாம்மா ?'
எனக்குழம்பியழும் நம் பிள்ளையின் சுடுகண்ணீர்
உன் அந்திமக்காலத்தில் உனக்குப் புரியலாம்.
/8th June, 2007
5 comments:
வெகு நிதர்சனமான கவிதை வரிகள் . போதைப்பிடியில் சிக்குண்டிட்ட கணவனுக்கு மனைவியாய் இருப்பதன் வலி, இயலாமை என எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள் .
வாழ்த்துக்கள்
நன்றி திரு.கென்.
உங்கள் பின்னூட்டத்தின் அடிபற்றி வந்தேன்.. இனிமேல் அடிக்கடி வந்து போகச்சொல்கின்றன உங்கள் கவிதைகள்!!
கலக்கறீங்க கணேஷ்!
வலிகளின் வார்த்தைகள்
மிக கொடூரமானதாக உணர்கிறேன்.
வாழ்த்துக்கள்
எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் வலியான வரிகள். தொடருங்கள்...
Post a Comment