Wednesday, August 24, 2022

சிறுவன்

மிகுந்த அன்போடும்
ஆழ்ந்த அக்கறையோடும்

நீங்கள் தந்த அறிவுரைகளை

மிகக் கவனமாக

குறிப்பெடுத்துக் கொண்டேன்

 

கூழாங்கற்களோடு விளையாடும்

தெள்ளிய நீரோடும்

சிற்றோடையின் இசையென

ஆழ்மனத்தின் இரைச்சல்கள்

அமைதி கொள்ளும் வரை

அதன் அர்த்தங்கள்

படித்துக் கொண்டேன்

 

கூர்பார்த்து தேர்ந்தெடுத்து

குறிபார்த்து எய்யப்பட்ட

அம்புகள் -

நேர்த்தியான மிடுக்கோடு

நேரம் பார்த்து சொறுகப்பட்ட

வார்த்தைகள் -

இயல்பான இடறலில்

இடம்தவறி எழுந்துவிட்ட

நினைவுகள் -

தாக்கும் போது

கேடயமாய் பயன்படுத்தவும்

பழகிக் கொண்டேன்

 

என்றாலும் -

விழியெல்லாம் ஊற்றெடுக்க

உதடெல்லாம் துடிதுடிக்க

உடலெல்லாம் நடுநடுங்க

சிறுவனொருவன்

என் அறைக்கதவைத் தட்டும்போது

சிந்தைகலங்கி அழாமல்

சிரிக்க இன்னும் பழகவில்லை.

 

-Ganesh.

Thursday, July 9, 2020

வந்து சேர்பவன்

எத்தனைதான் எழுதினாலும்
போய் சேரவேண்டும் இல்லையா
இல்லையென்றால்
எழுதுவானேன் ?

இன்றில்லை என்றாலும்
என்றாவதொருநாள்
வந்து சேர்வான் இல்லையா
அதற்காகத் தான்

Friday, July 3, 2020

அப்பாவின் பள்ளம்

இங்கிருந்து அங்கு செல்வதுதான்
வாழ்க்கை

குளிரூட்டப்பட்ட காரில்
இசையைத் தெறிக்கவிட்டு
நரம்பு புடைக்க கத்தியபடி
கடந்திருக்கலாம்

மாட்டுவண்டி கட்டிக்கொண்டு
மக்களை சேர்த்துக்கொண்டு
மெல்லிசை முனுமுனுத்தபடி
மெதுவாக கடந்திருக்கலாம்

தோள்களில் சுமந்தபடி
தீராக்கதை பேசி
வழிப்பாதை இரசித்து
நடந்தும் கடந்திருக்கலாம்

கூடவரவில்லை என்றாலும்
அக்கறையாய் அறிவுரை சொல்லி
அன்போடு வழிகாட்டி
அனுப்பியாவது வைத்திருக்கலாம்

மாறாக
தானே பெரிய பள்ளம் தோண்டி
தலைகுப்புற அதில் விழுந்து
தள்ளாடிச் சாய்ந்துகிடந்தார்
அப்பா

இங்கிருந்து அங்கு கயிறுகட்டி
அதில் நடந்தபடியோ
தொங்கியபடியோ
கடந்துகொண்டிருக்கிறது
வாழ்க்கை

Saturday, December 14, 2019

ஈரம்

அலட்சியமாய்
நீங்கள் சுண்டியெறிந்த
என் கண்ணீர்
கவிதையில் விழுந்தது

அலட்சியமாய்
நீங்கள் சுண்டியெறிந்த 
என் கவிதை
இன்னும் காய மறுக்கிறது

Friday, May 17, 2019

இந்த மரங்கள்

குளித்து முடித்து
ஈரம் சொட்ட
நீ வரும் அழகை
நினைவுபடுத்துகின்றன
மழையில் நனைந்த
ஈரம் காயாத
இந்த மரங்கள்

Wednesday, May 15, 2019

உள்ளெரியும் தீ

கண்ணீர் பெருகி
கழுவிப் பார்த்தும்
களைய மறுக்கும்
கண்களில் சோகக்கறை

முகத்தில் பழக்கமில்லா
புன்னகையொன்றை
பொருத்திப் பார்க்க
உதடுகள் நடிக்கும்

விருப்பமில்லா
வார்த்தைகள் விழுந்து
என்னை விலக விடு
என்று இறைஞ்சும்

மனதில் சுமக்க முடியா
பாரம் ஏறி
தோள்கள் துவண்டு புதையும்

சவமாய் சரிய
சாத்தியம் இருந்தும் -
உள்ளெரியும் தீயோ
முன்னே செல்
இன்னும் வெல் - என்று
செயலில் ஓங்கி ஒலிக்கும்
உலகம் நின்று கேட்கும்

Wednesday, January 9, 2019

பொக்கிஷம்

பேரன்போடு நீ கொடுத்த
உன் இதயப் பெட்டியை
பேராவலோடு
பெற்றுக் கொண்டேன்.

தயாராயிருந்த
என் பட்டியலில் இருந்து
ஒவ்வொன்றாய்
நான் தேடத் தொடங்க
ஒன்றும் கிடைக்காத படபடப்பில்
உன் பெட்டியில் இருந்ததெல்லாம்
வீசியெறிந்து
மீண்டும் மீண்டும்
தேடித் தோற்று
உன் இதயம் ஒரு காலிப்பெட்டி
என்று கண்ணீர் விட்டேன்.

இறுதியில் -
இருள் சூழ்ந்த தனிமையில் -
நான் வீசியெறிந்ததெல்லாம்
என்னவென்று
ஒவ்வொன்றாய்
ஒவ்வொன்றாய்
காணக் காண
உன் இதயமெனும்
பொக்கிஷத்தை
கண்டு கொண்டேன்.