Saturday, September 30, 2006

ஒர் விடுமுறை நாளில்

நாளை ஒருநாள் விடுமுறை
இன்று புதிதாய் பிறந்தோம்
உற்சாகமாய் ஓடி வா நண்பனே !

கடிகாரத்தின் இடியோசை
தடிகொண்டென்னை எழுப்ப
அவசரமாய் எழுந்து
அவசரமாய் வாழ்ந்து
அவசரமாய் சாக
என்க்குச் சம்மதமில்லை

சென்று விடலாம் நண்பனே
வாகனப்புகைச்சலில் இருந்து
விஞ்ஞான இரைச்சலில் இருந்து
எங்கே வயல் எங்கே நதி
எங்கே மலை - அங்கேயே
சென்று விடுவோம்

அதோ அந்த நதி
பாறையின் காதுகளில்
ஏதோ கிசுகிசுக்கிறதே -
என்னவென்று கண்டறிவோம் வா !

மரம் விட்டு மரம் தாவி
நலம் விசாரிக்கும்
குரங்குகளோடு குதிதாடுவோம் வா !

அந்த அணில்களின்
ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வோம்
ஆறுதல் பரிசு மட்டும்
கிடைத்தாலும் ஆனந்தமே !

அந்த தாய்பறவை தன் குஞ்சுகளுக்கு
பறக்க கற்றுத்தருவதை பார் -
பறவைகளோடு பறந்து திரிய
பறவைகளிடமே பாடம் படிப்போம் வா !

அங்கு பார்த்தாயா
அந்த இலை காற்றில்
அசைந்து அ..சை..ந்..து
ஏதோ எழுதுகிறதே
என்னவென்று கண்டறிவோம் வா !

அதற்குள் முடிந்து விட்டதா நண்பனே..
வைகறை காலை நண்பகல் எற்பாடு எல்லாம் ?
பரவாயில்லை
பாக்கி இரவு பத்திரமாய் இருக்கிறது
நிலவைத் தலையணையாக்கி
நட்சத்திரங்களைப் போர்வையாக்கி
தென்றலை வெண்சாமரம் வீசச் செய்து
முதலில் ஒரு முயல்குட்டியை
தூங்க வைப்போம் - பின் அதன் காலடியில்
கண் துயில்வோம்.
கனவிலும் வலம் வரட்டும்
நம் விடுமுறை சொர்க்கத்தின் வாசனை.

நாளை முதல் மீண்டும் நாம்
எந்திர எச்சங்கள்.

/1997

Monday, September 25, 2006

தேன் துளிகள்

தவழ்ந்து எழுந்து நடந்து
செப்புச்சட்டி விளையாடி
பெயர் வகுப்பு சொல்லப் பழகி
படம் பார்த்து கதை சொல்லி
மிட்டாய், ஊசிக்கு மட்டும் அழுது
கண்கள் விரிய விரிய உலகம் வியந்து
நிறைந்திருந்தயென் பிள்ளைப்பிராயத்து
வெள்ளைத்தாளில் பின்னொரு நாள் -

நகங்கள் கிழித்து வழிந்த இரத்தத்தில்
சிந்திய கண்ணீர் சேர்த்துக் குழைத்து
வார்த்தைத்தீயில் துடித்த வலியில்
வாழ்க்கைப்பாடம் எழுதி எழுதி -

இதழ்களெல்லாம் இரும்பாகிப் போன
மலர்மனதில் - என்றேனும்
குளிர்சாரலோடு தென்றல் வீச
இன்னும் சுரக்கின்றன
சில தேன் துளிகள்.

/25 Sep, 2006

Saturday, September 23, 2006

எ.பி.சு.ரா.க - 3

இன்னொரு சு.ரா. கவிதை.

==============
கடல் சிரித்தது
==============
கல்லும் பிராணன் இழுத்து
மேலெழுந்து பறந்தது.

அலைகள் பாதம் முளைத்துக்
கரையேறி வந்தன.

திசுக்கள் பரிணமித்து
வேதங்கள் கோஷித்தனர்.

மூளைச் சுடரின் அங்குசம்பட்டு
பிளிறி எழுந்தன யானைகள்.

மின்னலும் மழையும்
பின்பக்கம் நின்றன.

அத்தனையும் முடிந்து
ஒரு விசும்பல் எழுந்தது.

ஏன் என்றது வானம்.
நான் யார் என்று கேட்டது
மண்ணில் ஒரு குரல்.
கடல் சிரித்தது.

- சுந்தர ராமசாமி 1975

Sunday, September 17, 2006

கண்டேன்

கரடுமுரடாய் நானிருப்பேன் -
மென்மையைக் கற்றுத் தரும்
பூக்கள் வேண்டும்.

சினத்தால் கொஞ்சம் சீறுவேன் -
கனிவைக் கற்றுத் தரும்
தென்றல் வேண்டும்.

கண்கள் கொஞ்சம் கரைந்திருப்பேன் -
எனை சிரிக்கச் சொல்லும்
பிள்ளைமுகம் வேண்டும்.

வெறும் கல்லாய் கூட நானிருப்பேன் -
என் ஈரம் அறியும்
வேர் வேண்டும்.

இடைவந்த இடரால் வீழ்ந்திருப்பேன் -
எனை பறக்கச் சொல்லும்
சிறகுகள் வேண்டும்.

புயலாய் ஓடிக் களைத்திருப்பேன் -
பூங்குயில் பாடும்
மெல்லிசை வேண்டும்.

இடிபட்டு இதயம் கிழிந்திருப்பேன் -
இதமாய் வருடும்
பூவிதழ் வேண்டும்.

சிந்தை தெளிந்திருந்தும் சரிந்திருப்பேன் -
சுட்டெரித்து உணர்த்தும்
சூரியன் வேண்டும்.

கண்கள் மூடிக் கனவினில் இருப்பேன் -
நிகழ்கால நிமிடச் சத்தம்
நித்தமும் வேண்டும்.

சந்தோஷத்தில் சற்றே சத்தமாய் சிரிப்பேன் -
என் கைகோர்தாடும்
கார்மேகம் வேண்டும்.

முதிர்வினில் தளர்நடையிட்டே செல்வேன் -
என் பாதம் அறியும்
பாதை வேண்டும்.

முடிவினில் மண்சுவைக்க முடிந்திருப்பேன் -
என்மேல் பனித்துளி வார்க்கும்
பூக்கூட்டம் வேண்டும்.

நான்முகனே நான்முகனே
நான்கு திசை நாயகனே
நாலிரண்டு செவியாலும்
நல்லபடி கேட்டாயா ?
வேண்டியதைச் சொல்லிவிட்டேன்
சொன்னபடி தருவாயா ?
கேட்டேன் -
கேட்டதைத் தந்தான்.
தந்ததைக் கண்டேன்.
பெண்.

/1998

Saturday, September 16, 2006

தேடல்

நான் வாழும் தெருவின் மூலைமுடுக்கெல்லாம்
எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கின்றன
அதரப்பழசுமாய் புதுச்சாயம் பூசிக்கொண்டதுமாய்
பலப்பல அடையாளங்கள்.

வசீகரிக்கும் அந்த அடையாளங்களின் பின்னே
முண்டியடித்துப் பலரும் ஒளிந்து கொள்ள
சேர்ந்த ஆள்பலத்தில் மிகுந்த இறுமாப்போடு
அவை மார்தட்டிக் கொள்ளும் ஓசையில்
எங்கள் தெருவே அதிர்ந்தது.

"எல்லாம் சரி தான் ஐயா - உங்கள்
அர்த்தம் எங்கே - அதன்
ஆழம் எங்கே - அங்கு சுரக்கும்
அமைதி எங்கே - அதில் பிறக்கும்
அழகு எங்கே?" - எனக்கேட்டதும்
வழிந்த சாயத்தை துடைத்துக் கொண்டு
முகம் சுளித்த அந்த அடையாளங்கள்
கோபம் கொண்டு கோரைப்பல் காட்டி
எனை விரட்டியடித்தன.

இப்போதெல்லாம் கவனமாய் தேடுகிறேன் -
உள்ளே கோரைப்பல் இல்லாத அடையாளங்களையும்,
அடையாளம் கூட வேண்டாத
கம்பீரமான அர்த்தங்களையும்.

/16 Sep, 2006

Monday, September 4, 2006

எ.பி.சு.ரா.க - 2

எனக்குப் பிடித்த சுந்தர ராமசாமி கவிதைகளுள் அடுத்தது -
நம்பிக்கை பற்றி ஒரு simple and straight forward kavidhai.

=========
நம்பிக்கை
=========
தூரத்தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.

வேறு யாரோ.

அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.

Saturday, September 2, 2006

முட்பூக்கள்

- 1 -

அவன் என்னை கவனித்தான்.

மானிடத்தூசு தட்டி
புவி வீட்டைப் புதுப்பித்தேன்
பூத்திட்ட பூங்காடாய்
அதையெங்கும் நிறைத்திட்டேன்
நிறைத்திட்ட இடமெல்லாம்
நிறைந்து நிற்கும் -
என் ஆசைகள்.

பூக்களே பூக்களே
நீங்களாய் நானிருப்பேன்

உம்மோடு விளையாடும்
பூங்காற்றாய் தலையசைப்பேன்
உள்ளுக்குள் உயிரோடு
வாசமாய் வசித்திருப்பேன்
நாணித் தலைகுனியும்
இதழ்களாய் சிவந்திருப்பேன்
வியர்வையாய் உருண்டோடும்
பனித்துளியாய் குளிர்ந்திருப்பேன்
சிதைகின்ற நனைகின்ற
வேர்களாய் மணத்திருப்பேன்

பூக்களே பூக்களே
நீங்களாய் நானிருப்பேன்

இதழங்கம் நோகாமல்
அழகொன்றும் நோகாமல்
பூவண்ணம் கோர்த்தெடுத்து
புதுச்சிறகு செய்து கொண்டேன்
என்னோடு கட்டிக் கொண்டேன்

என் சிறகுகள் படபடக்கும்
ஓசையில் விழித்துக்கொண்ட வானம்
தன் நீள அகலங்களை
தோல்விப்பார்வை பார்க்க
விரிகின்றேன் நான்
விரிகின்ற திசையெல்லாம்
விரிந்து நிற்கும் -
என் ஆசைகள்.

அவன் என்னை கவனித்தான்.


- 2 -

புதுவானில் பூச்சிறகோடு
உயரப்பறந்திட்டேன் நான்.
அவன் தனக்கான
வேளை வந்து போல்
வேகமாய் இயங்க ஆரம்பிக்க
மறுகணம் -

துளித்துளியாய் என் மீது
ஏதேதோ தெறித்து விழ -
என்ன இது என்ன இது
சிறகுகள் வேர்க்குமா?
வேர்க்கிறதே..

சுமையாக என்மீது
ஏதேதொ வந்தழுத்த -
என்ன இது என்ன இது
பூக்கள் கனக்குமா ?
கனக்கிறதே..

தாழப்பறந்து
மொத்தமும் கிறுகிறுத்து
சிறகுகள் கிழிபட
முட்காட்டில் விழுந்திட்டேன்.

காண்கின்ற காட்சியாக
காய்ந்திருக்கும் முட்கள்
மெல்ல என் விழிகளுக்குள் ஊடுருவ
தாளாமல் இமை மூடுகின்றேன்.

நெஞ்சத்தின் ஆழத்தில்
உயிர்த்திருந்த பூக்கள்
மெல்ல மேலெழுந்து
என் விழிகளுக்குள் உறுத்த
தாளாமல் இமை திறக்கின்றேன்.

உள்ளிருந்தும் வெளியிருந்தும்
உயிர் வதைக்கும் வலிகளே
படைத்தும்மை அனுப்பி வைத்து
இரசித்திருக்கும் மூடன் யார் ?

தேடுகிறேன் தேடுகிறேன்
முகங்காட்டா எதிரியவன்
முழுவுருவம் தேடுகிறேன்
தேடித் தொலைந்த போது
தோற்றது தெரிந்தது.

தன் வேலை முடிந்ததென
அவன் சிரித்துக் கொண்டான்.


- 3 -

என் பூக்களெல்லாம்
முட்காட்டில்
இதழ்களாய் கிழிபட்டு
சிதறிக்கிடக்க -
சொல்லிக் கொள்கிறேன் -
"துயிலுக துயிலுக
பூவென்றும் இதழென்றும்
கண்டு சொன்ன உணர்வுகளே
துயிலுக !
முள்ளென்றும் வலியென்றும்
உணர்த்துகின்ற உணர்வுகளே
துயிலுக ! "

ஒரு சின்ன துடிப்போடு
என் உணர்வுகள்
அடங்கிப் போகின்றன
எழுகின்றேன் நான்.

அவன் சந்தேகம் கொண்டவனாய்
மீண்டும் என் முன்னே கிழிந்திட்ட
பூக்களைப் பரப்பி வைத்தான்.

ஞாபகார்த்தமாய்
அவன் பூக்களை அள்ளிக்கொண்டு
அவன் முட்களை அள்ளிக்கொண்டு
என் பாதையில் நான் பயணித்தேன்.

அவன் வேலை முடிந்ததென
நான் சிரித்துக் கொண்டேன்.

/2000

எ.பி.சு.ரா.க - 1

எனக்குப் பிடித்த சுந்தர ராமசாமி கவிதைகளுள் இது ஒன்று.

-----------------
இந்த உலகம்
-----------------
வானம் வந்திறங்கும்போது இளைப்பாற
மேகத்தால் ஒரு கட்டில் செய்தேன்
காலை இளங்கதிர்களைக் கூட்டி
அவற்றின் ஓளியால் இசை செய்து
கட்டிலின் அருகே வைத்தேன்
விண்மீன்களை அள்ளியெடுத்து
தெருவெங்கும் இறைத்து வைத்தேன்.

கடுந்தவத்தின் முடிவில்
வானம் வந்திறங்கிற்று
சயனிக்க வேணும் என்றேன்
கழிப்பறை எங்கே
என்று கேட்டது வானம்.

- கொல்லிப்பாவை அக்டோபர் 1985
(சுந்தர ராமசாமி கவிதைகள் ப-99)

இதை மிகமிக ஆழமான கவிதையாக உணர்ந்தேன். கவிதை விவரிக்கும் தளம் ஒன்றாக இருக்க, அதில் பயணித்து அங்கு பார்த்ததை, உணர்ந்ததை நடைமுறை வாழ்வின் பல பக்கங்களில் பொருத்திப்பார்க்க முடிகிறது. அப்படி செய்யும் போது கவிதையின் அர்த்தம் இன்னும் ஆழமாகிக்கொண்டே போவதை உணரமுடிகிறது. கவிதையின் தலைப்பு அதன் அர்த்தத்தை கண்டுபிடிக்க வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. இப்படி எழுத வேண்டும் என்று ஆசை. இன்னும் எத்தனை வயதாகுமோ தெரியவில்லை.

நான்

விழிகளை விழிநீர் மறைக்க
விழிநீரை விழிநீர் மறைக்க
வழியும்
என் வலிகள்

வலிச்சுமை தாளாமல்
விரல்களைக் கொளுத்திய வெளிச்சத்தில்
ஓற்றையாய் திசைகளைத் தேடும்
என் பாதைகள்

நிஜங்களின் மரணத்தால்
அமைதியாய் துயில்கையில்
நிழல்களின் சூடுபட்டு
திடுக்கிடும்
என் உணர்வுகள்

காய்ந்து உதிர்ந்திடும் பயத்தால்
இதழ்கள் மலர மறுத்து
மொட்டாய் கட்டுக்குள்
என் கனவுகள்

வழிப்பட்ட வானையெல்லாம்
தன் முதுகிலே சுமந்து கொண்டு
வியர்த்து அயர்ந்திருக்கும்
என் சிறகுகள்

என்னவை இவையெல்லாம்
என் மீது போர்த்திக் கொண்டு
உள்ளுக்குள் உயிரோடு -
நான்

/2000

கிடைக்குமா சொல்லுங்கள்

ஆற்றங்கரை
ஆலமரம்
கிராமத்து ஊஞ்சல்

பெளர்ணமி நிலவு
பவர் கட்
பக்கத்தில் நண்பன்

சுத்தமான பேருந்து நிலையம்
கூட்டமில்லாப் பேருந்து
ஜன்னலோரத் தென்றல்

டிசம்பர் மாதக்குளிர்
கதகதப்பாய் ஒரு போர்வை
குளுமையான உறக்கம்

அறிவு அடக்கம் அழகு
எல்லோர்க்கும்

மழைச்சாரல்
ஜன்னலில் ஒரு சிட்டுக்குருவி
கொஞ்சம் கவிதை

கிடைக்குமா சொல்லுங்கள்...

/1997

நீ, நான் - நாம்

எனக்கே தெரியாத என்னை
எப்படியடா நீ மட்டும்
கண்டுபிடித்தாய் ?

என் நினைவெல்லாம் துவண்டுவிழும்
சங்கடப்பொழுதினில்
எனக்குப் பிடித்ததெல்லாம்
எனக்கே ஞாபகப்படுத்தி
என்னைப் பரவசப்படுத்த
எப்படி முடிகிறது -
உன்னால் மட்டும் ?

சத்தமாய் தானே சிரித்திருந்தேன் -
என் கண்ணீர் முகவரிகளை
நீ மட்டும் எங்கிருந்து
கண்டெடுத்தாய் ?

ஊரே மெச்சும்
மேடையெல்லாம் பேசும் - ஆனால்
தப்புத்தப்பாய் நான் போட்ட
கூட்டல் கணக்குகள்
உன் நோட்டுப் புத்தகத்தின்
கடைசிப் பக்கத்தில்

நீ மட்டுமே அறிந்த இரகசியம் -
நான் மகான் அல்ல

என் கால் பிடிக்கும்
புயலை உனக்குத் தெரியும்
எனைக் காயம் செய்யும்
பூவும் உனக்குப் புரியும்

இதுவரை என்னிடம் அதிகம்
திட்டும் குட்டும் வாங்கியது
நீ மட்டும் தான்

கூட்டமாய் சென்றோம்
அந்த மரத்தின் பூக்களையே
மணிக்கணக்காய் நான்
பார்த்திருந்த போது
என்னோடு இருந்தது
நீ மட்டும் தான்

இதனால் மட்டுமல்ல -
என் வலிகளை
உன் விழிகளும்
சுமப்பதால் தான் சொல்கிறேன் -
நீ என் நண்பன்

நீ, நான் - நாம்
போதுமடா இந்த பூமிக்கு

/1998