Saturday, September 2, 2006

முட்பூக்கள்

- 1 -

அவன் என்னை கவனித்தான்.

மானிடத்தூசு தட்டி
புவி வீட்டைப் புதுப்பித்தேன்
பூத்திட்ட பூங்காடாய்
அதையெங்கும் நிறைத்திட்டேன்
நிறைத்திட்ட இடமெல்லாம்
நிறைந்து நிற்கும் -
என் ஆசைகள்.

பூக்களே பூக்களே
நீங்களாய் நானிருப்பேன்

உம்மோடு விளையாடும்
பூங்காற்றாய் தலையசைப்பேன்
உள்ளுக்குள் உயிரோடு
வாசமாய் வசித்திருப்பேன்
நாணித் தலைகுனியும்
இதழ்களாய் சிவந்திருப்பேன்
வியர்வையாய் உருண்டோடும்
பனித்துளியாய் குளிர்ந்திருப்பேன்
சிதைகின்ற நனைகின்ற
வேர்களாய் மணத்திருப்பேன்

பூக்களே பூக்களே
நீங்களாய் நானிருப்பேன்

இதழங்கம் நோகாமல்
அழகொன்றும் நோகாமல்
பூவண்ணம் கோர்த்தெடுத்து
புதுச்சிறகு செய்து கொண்டேன்
என்னோடு கட்டிக் கொண்டேன்

என் சிறகுகள் படபடக்கும்
ஓசையில் விழித்துக்கொண்ட வானம்
தன் நீள அகலங்களை
தோல்விப்பார்வை பார்க்க
விரிகின்றேன் நான்
விரிகின்ற திசையெல்லாம்
விரிந்து நிற்கும் -
என் ஆசைகள்.

அவன் என்னை கவனித்தான்.


- 2 -

புதுவானில் பூச்சிறகோடு
உயரப்பறந்திட்டேன் நான்.
அவன் தனக்கான
வேளை வந்து போல்
வேகமாய் இயங்க ஆரம்பிக்க
மறுகணம் -

துளித்துளியாய் என் மீது
ஏதேதோ தெறித்து விழ -
என்ன இது என்ன இது
சிறகுகள் வேர்க்குமா?
வேர்க்கிறதே..

சுமையாக என்மீது
ஏதேதொ வந்தழுத்த -
என்ன இது என்ன இது
பூக்கள் கனக்குமா ?
கனக்கிறதே..

தாழப்பறந்து
மொத்தமும் கிறுகிறுத்து
சிறகுகள் கிழிபட
முட்காட்டில் விழுந்திட்டேன்.

காண்கின்ற காட்சியாக
காய்ந்திருக்கும் முட்கள்
மெல்ல என் விழிகளுக்குள் ஊடுருவ
தாளாமல் இமை மூடுகின்றேன்.

நெஞ்சத்தின் ஆழத்தில்
உயிர்த்திருந்த பூக்கள்
மெல்ல மேலெழுந்து
என் விழிகளுக்குள் உறுத்த
தாளாமல் இமை திறக்கின்றேன்.

உள்ளிருந்தும் வெளியிருந்தும்
உயிர் வதைக்கும் வலிகளே
படைத்தும்மை அனுப்பி வைத்து
இரசித்திருக்கும் மூடன் யார் ?

தேடுகிறேன் தேடுகிறேன்
முகங்காட்டா எதிரியவன்
முழுவுருவம் தேடுகிறேன்
தேடித் தொலைந்த போது
தோற்றது தெரிந்தது.

தன் வேலை முடிந்ததென
அவன் சிரித்துக் கொண்டான்.


- 3 -

என் பூக்களெல்லாம்
முட்காட்டில்
இதழ்களாய் கிழிபட்டு
சிதறிக்கிடக்க -
சொல்லிக் கொள்கிறேன் -
"துயிலுக துயிலுக
பூவென்றும் இதழென்றும்
கண்டு சொன்ன உணர்வுகளே
துயிலுக !
முள்ளென்றும் வலியென்றும்
உணர்த்துகின்ற உணர்வுகளே
துயிலுக ! "

ஒரு சின்ன துடிப்போடு
என் உணர்வுகள்
அடங்கிப் போகின்றன
எழுகின்றேன் நான்.

அவன் சந்தேகம் கொண்டவனாய்
மீண்டும் என் முன்னே கிழிந்திட்ட
பூக்களைப் பரப்பி வைத்தான்.

ஞாபகார்த்தமாய்
அவன் பூக்களை அள்ளிக்கொண்டு
அவன் முட்களை அள்ளிக்கொண்டு
என் பாதையில் நான் பயணித்தேன்.

அவன் வேலை முடிந்ததென
நான் சிரித்துக் கொண்டேன்.

/2000

No comments: