Friday, February 23, 2007

கனவுகள் உடையும் சத்தம்

கனவுகள் உடையும் சத்தம்
கேட்டதுண்டா ?

நீண்டு செல்லும் இருண்ட குகைபோல்
குரூரமான நிசப்தம் சூழ்ந்த பின்னிரவில்
விட்டம் பார்த்து வெறித்த பார்வையில்
கண்ணீர் ஒருதுளி திரண்டு
கன்னம் வந்து தொட்டதும்
காதைக் கிழிக்கும் சத்தத்தோடு
உடைந்து நாற்புறம் சிதறும்
ஆசைகட்டி அழகு பார்த்த
அத்தனை ஆயிரம் கனவுகள்.

பொழுது புலர்ந்ததும் கண்கள் உலர்ந்ததும்
சிதறிய துகள்களைத் தேடியெடுத்து
இன்னொரு கனவைச் செய்து வைத்தால்
தொடரும் இரவில்
அதுவும் உடைந்து சிதறும்.

எத்தனை வண்ணமாய்
கனவுகள் சேர்த்தாலும்
அவை உடையும் சத்தம் மட்டும்
என்றும் ஒன்றாகவே இருக்கிறது.

/23 Feb, 2007

ஆண்மகன்

சுகிக்க துணையாய் ஒரு பெண்தேகம்
புசிக்க சுவையாய் நல்உணவு
சேவிக்கும் நிர்பந்தத்தில் சுற்றி நாலு பேர்
இவையெல்லாம் பெற்று
முகமே இல்லாத
முதுகெலும்பில்லாத
உயிரினம் ஒன்று
ஊர்ந்து என்வழி செல்லக் கண்டு
தேகம் அதிர்ந்து போனேன்.

எப்படி எல்லாம் சாத்தியம் ஆனது
நீ மனிதனே தானா
என்று கேட்டேன்.

திருமணச்சடங்குகள் முற்றும் ஒப்பித்து
கதகதப்பாய் தன் மேல் சுற்றிக் கிடந்த
பழைமைப் போர்வையை சிறிது விலக்கி
'நான் ஆண்மகன்' என்று
பல்லைக் காட்டிச் சிரித்தது.

/23 Feb, 2007

Thursday, February 1, 2007

ஒளிரும் காலம்

கிடைத்ததெல்லாம் பற்றிக்கொண்டு
ஆக்ரோஷமாய் திமிறி எரிகிறது
என்னுள் எப்போதுமொரு தீக்காடு.

நான் நடந்து செல்லும் அதிர்வினில்
புலம்பெயர்ந்து பறக்கின்றன
என் மரத்துப் பறவைகள்.

என் சிரிப்பொலியின் எக்காளம்
கேட்போர் செவிப்பறையில்
ஓங்கி அறைகிறது.

என் அழுகுரலின் கேவல்கள்
இருள்வெளியெங்கும் நிறைந்து
ஓலமிட்டுத் தவிக்கின்றன.

நான் பயணிக்கும் பாதையில்
என் பாதச்சுவடுகள் மட்டுமே
பின் தொடர்கின்றன.

என்றாலும்
தணிந்து கனிந்து நிறைந்து
தூயசுடராய் நிமிர்ந்தொளிர்ந்து
உங்களை நான் வரவேற்க்கும்
காலம் வரும்.

/1st Feb, 2007