Friday, April 20, 2007

ஆசிரியப்பா

{ ஒரு ஆசிரியர் தினவிழாவிற்காக கவியரங்கம் பாணியில் நான் கல்லூரியில் எழுதி வாசித்த கவிதை. பாரதியோடு பரிச்சயம் உள்ளவர்களுக்கு இது "கண்ணன் என் சீடன்" கவிதையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது தெரியும். இந்த "சின்ன" கவிதையை எல்லோரும் கொட்டாவி விட்டு இரசித்து, நான் வாசித்து முடித்ததும் "அப்பாடா" என்று கைத்தட்டினார்கள் :) கவிதையை சரியான audience-இடம் கொண்டு செல்லாவிட்டால் அது காமெடியாகி விடும் என்ற அனுபவம் பெற்றதாய் ஞாபகம் :) }

=================
ஆசிரியப்பா
=================
முன்னைச் சிலதிங்களாய் முடிவிலாதுயரெய்தி
சிந்தைமிக நொந்திட்டேன்; செய்வதறியா துறைந்திட்டேன்
தொல்லைதரு விசித்திரங்களெல்லாம் எல்லையிலா
வடிவிலே வந்தென்னைவாட்டிட உள்ளம்மிக உளைந்திட்டேன்
நான்பட்ட பாட்டையெல்லாம் பாட்டாகயெழுதிவைக்கப்
பலநூறு பக்கங்கள் போதாது போதாது
அன்னவையாவினுக்கும் ஆதிமூலகாரணமாயானவன்
ஒரு சின்னவன், சிறியன் - என் சீடன்.

பிள்ளைமுகங்காட்டி கிள்ளைமொழியெல்லாம் பேசிடுவான்
சாந்தஸ்வரூபியாய் சாதுவாய்
சொன்னதெற்கெல்லாம் தட்டாமல் தலையசைப்பான்
ஆனாலுமையா அவனை நம்பாதீர்
என் சீடனால் எனக்கு நிகழ்ந்ததையெல்லாம்
நாடறிய உரைக்கின்றேன் நல்ல செவி தாரீரோ !

முற்றாத இளங்காலைப் பொழுதினிலே
கற்றால் அஃதுங்கள் காலடியில் சீடனாயிருந்தே
என்றவன் சொல்லக் கேட்டு
உற்றேன் உளமெல்லாம் பூரிப்பும் பெருமிதமும்.
மூர்த்தியிவன் சிறியவன்தான் ஆனாலும் பெருங்
கீர்த்தியெய்தி புகழெய்தி என்பெயர் காப்பான் என்றெண்ணி
சீடனாய் அவனிருக்கச் சம்மதித்தேன்
பெருந்துயரை நானே தான் வரவழைத்தேன்.

முதற்சில தினங்களெல்லாம் அவன்பால் அகப்பற்று மிகக்கொண்டு
வேதாந்த ஞானமெல்லாம் விருப்புடனே ஓதலானேன்
அவனும் விழிப்புடனே கேட்டிருந்தான் - ஆனால்
வெறுமனே கேட்டிருந்தானேயொழிய
ஓர்முறையேனும் எதிர்க்கேள்வி கேட்டானில்லை.
ஓகோ, பெரியோர்மேல் மிக்க மரியாதைபோலும்
என்றெண்ணி மகிழ்ந்து அவனோடு
இணக்கம் வளர்க்க விரும்பி -
"மகனே இன்றனை உனக்கு நான் ஓதியவற்றுள்
எங்கேனும் ஐயம் இருந்திட்டால்
இக்கணமே இயம்பிடுவாய் -
தெளிவு செய்வேன்" என்றேன்.
அவனோ தீப்பட்டவன் போல் திடுக்கிட்டெழுந்து
"உள்ளேன் ஐயா" என உரைத்தமர்ந்திட்டான்.
என் உள்ளம்பட்ட உளைச்சல் சொல்லிமாளாது.

இமைப்போதும் சோராமல் உறங்குகிறான்
இமையிரண்டும் மூடாமலும் உறங்குகிறான்
ஊரே ஒன்றுகூடி உற்றுநோக்கிட்டாலும்
கள்ளன் அவன் கண்ணுறக்கம் எந்தவகை
கண்டுசொல்ல இயலாது - நானும்
சின்னஞ்சிறு பாலகன் தானே சிறுவன் தானே
சீடன் இவனை சீர்செய்ய எண்ணுங்கால்
சினங்கொள்ளல் கூடாது எனக்கருதி
இன்னும் பலவும் முயற்சித்தேன் - அவனோ
கணவன் சொல்லினுக்கெல்லாம் எதிர்செய்யும் மனைவிபோல்
நான் சொன்னதெற்கெல்லாம் நேரெதிராய் நடந்திட்டான்.

இறுதியாய் ஓர்முறை முயற்சித்து விடுவது என்றெண்ணி
அவனையருகினில் அழைத்து -
"உள்ளும் புறமும் ஒன்றெய்தி நான் சொல்லும் பாடங்களில் உன்
கண்ணும் கருத்தும் காதும் வைத்திடுவாய்
மூத்தோர் சொல் மதிசேர்ப்பாய்
மாதா பிதா குரு தெய்வம் அறிவாயப்பா" என்றேன்.
பதிலுக்கு துடுக்குடன் அவன் வெடுக்கென்றுரைகிறான் -
"ஐயா நீர் சொன்ன வரிசையிலே
நான்காமன் தான் எனையறிந்த நாயகன்.
தேங்காய் பூ பழம் தேர்வோடு
எப்போது நான் போனாலும்
எதிர்கேள்வியின்றி அருட்புரிவான்.
அவனிடத்து நீர் சீடனாய் அமைகுவீரே!!"
என்றவன் சொல்லக் கேட்டு
எண்ணற்ற எரிமலைகள் வெடித்தென்னுள்.
கண்கள் சிவந்து இதழ்கள் துடித்திட
"சீடனே சிறிய மூடனே
காடனே கபட வேடனே
இனியென் முகத்தில்
விழித்திடா தொழிந்து போ"
என வெடித்திட்டேன்.

மறுகணம்
வானமிருண்டது; பூமி அதிர்ந்தது;
மின்னல் கிழிந்தது; இடி முழங்கியது;
விண்ணுக்கும் மண்ணுக்குமாயோர்
ஜோதிப் பிழம்பு தோன்றியது - அதிலே
ஆதியாய் அந்தமாய் மூலமாய் மூர்த்தியாய்
நின்று நகைத்திட்டான் -
மாயக் கண்ணன்.

"கண்ணா,
சீடனாய் வந்து இந்த சிற்றுயிரை
குறையுயிராய் வதைத்திட்ட
கோலமேனப்பா ?" எனக் கேட்டேன்.
"மகனே,
இதற்கெல்லாம் நீ சோர்ந்திடல் வேண்டா !
எமைவிடப் பொல்லாத கண்ணன்கள்
புவியெங்கும் சீடராய் நிறைந்திருப்பர்.
இதற்கொண்ட அனுபவத்தால்
அவர்களையெல்லாம் சமாளிக்க முயற்சிப்பாய் -
அதற்குமேல் ஆண்டவன் சித்தம் !!"
எனச் சொல்லி மறைந்திட்டான் மாயக்கண்ணன்.
திகைத்திட்டேன் நான் !!!

/Sep, 2000

Wednesday, April 4, 2007

எ.பி.சு.ரா.க - 6

ஒரு கவிதையை எப்போது நமக்குப் பிடிக்கின்றது ? நாம் உணர்ந்ததையே அது அழகான வார்த்தைகளில் விளக்கிச் சொல்லி நம்மோடு தோழைமை பாராட்டும்போதா ? நாம் இதுவரை அறிந்திராத ஒன்றை அது உணரத்தரும்போதா ? இல்லை சதா நம்முள் அழுத்திக் கொண்டிருந்தாலும் என்னவென்றே நம்மால் இனம் காணமுடியாத ஒன்றை இது தான் அது என்று உருவம் தந்து நம்முன் நிறுத்தும்போதா ? ஏதோ காரணத்தினால் சுந்தர ராமசாமியின் உருக்கமான, தலைப்பில்லாத இக்கவிதை மனதைத் தொட்டது.

~~~~~~~~
என் துக்கத்திற்கு விடுமுறை இல்லை என்பதறிவேன்
இருப்பினும் அது சற்றுத் தூங்கினால்
நானும் சற்றுத் தூங்க முடியும்
அதன் விழிப்பு என்னை வதைக்கிறது
சற்று விட்டுப் பிடி என்று சொல்லவும் எனக்குத் தெரியவில்லை
இருந்தாலும் இப்போதும் சிரிக்க முயல்கிறேன்

என் துக்கத்திற்கு விடுமுறை இல்லையென்பதை உணர்ந்துவிட்டேன்
இருந்தாலும் அது சற்று ஓய்வெடுத்துக் கொண்டால்
அந்நேரம் நானும் ஓய்வெடுத்துக்கொள்ள முடியும்
தூங்கினால் நானும் தூங்க முடியும்
இருப்பினும் சிரிக்க முயல்கிறேன்
சில சமயம் வெளியே போகிறேன்
இனம்கூற முடியாத ஏதோ ஒன்று நெற்றிப்பொட்டை
சதா தாக்கிக்கொண்டிருக்கிறது
சுமை களைந்து நிற்க மனம் ஏங்குகிறது
மாலையில் சூரியன் மறையும்போது
தனி அறையில் அமர்ந்திருக்கிறேன்
இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்கிறேன்
என்னைத் தவிர இங்கு வேறு எவருமில்லை
எனச் சொல்லிச் சிரிக்கிறது துக்கம்.
- சுந்தர ராமசாமி, 24.1.1995
~~~~~~~~~

Monday, April 2, 2007

எ.பி.சு.ரா.க - 5

சுந்தர ராமசாமியின் இக்கவிதையைப் படிக்கும் போதெல்லாம் மனதும் உடலும் பறக்கத் துடிக்கின்றன.

=================
பறக்கத் துடி
=================
இன்னுமா நீ பறக்கவில்லை ?
விரித்த சிறகுகளும்
தணிந்த முன்னுடலும்
தொட்டும் தொடாமல்
மேலெழுந்து நிற்கும் கால்களுமாய்
உன்னை வடித்திருக்கும்
அந்தச் சிற்பியின் அந்தரங்கம்
இன்னுமா உனக்கு எட்டவில்லை ?
நீ அமர்ந்திருக்கும் அந்தக் கல்தூண்முன்
அகன்ற முற்றத்தில்
காலம் காலமாய் வந்திறங்கி
தம் அசைவுகளிலும் நளினங்களிலும்
சோபைகளை வாரியிறைக்கும்
புறாக்களின் சுதந்திரத்தைக்
கண்ணாரக் கண்ட பின்னுமா
சிறகை விரித்து
பாதம் உயர்த்தி
பறக்கத் தயங்கி
நின்று கொண்டிருக்கிறாய் ?

சிறிது சிந்தித்துப் பார்
உன் இனம்போல் நீயும்
வானத்தில் வட்டமிட வேண்டாமா ?
உனக்கும் தான் இருக்கின்றன
அவைபோல் சிறகுகள்
உடற்கட்டில் துல்லியம்
இதைவிடவா கூடும்.
உயிரா ?
உள்துடிப்பில் இருந்துதானே பற்றிற்று
உயிரின் பொறி
கல்தானே கனலாயிற்று
பறக்கத் துடி
துடி துடி துடி
பற்றும் உயிர்.
- சுந்தர ராமசாமி, நவம்பர் 1993