Friday, March 21, 2008

வழியனுப்புதல்

இருளடர்ந்த இரவொன்றில்
திருமண சொர்கத்திலிருந்து செங்குத்தாய் கீழிறங்கி
பிறந்தகம் வந்துசேர்ந்த என் செல்ல மகள்
தட்டாதே எனச்சொல்லிவிட்டு
தன்னறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள்.

நான் தொட்டுணர்ந்த அவள் பிஞ்சுப்பாதங்களின்
மென்மையை ஒத்திருந்த கனவுகளை
அங்குதான் அவள் வளர்த்திருந்தாள்.

விழிகள் விரட்டியதில் வெட்கம் தின்ற
தன் முதல் தாவணி
வெண்புரவியில் வீற்றிருக்கும்
இராஜகுமாரனின் வருகைக்கான டைரிப்பக்கங்கள்
சில ஓவியங்கள் பாடல்வரிகளோடு கவிதைத்துண்டுகள்
இவை தவிர்த்து
பிணமொன்று அங்கே கண்டதாய்
அலறிக்கொண்டே வெளியோடி வருபவளை
நெஞ்சோடு தாங்கிக் கொண்டு
இன்னபிற இன்னபிற
நியதிகள் சிக்கல்கள் விளக்கி
வழியனுப்பி வைக்கின்றேன்
வெறும் பிரார்த்தனையோடு.

/21st March, 2008.

2 comments:

தமிழ்நதி said...

உங்கள் கவிதைகள் தமிழ்மண முகப்பில் என்ன பெயரில் தெரிகின்றன? வித்தியாசமான பாடுபொருள்... கவித்துவம். இனிக் கட்டாயம் வாசிப்பேன்.

-ganeshkj said...

தமிழ்நதிக்கு,

உங்களுடைய எழுத்தின் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தங்கள் வருகை மற்றும் comments உற்சாகம் தருகின்றது. மிக்க நன்றி.

தமிழ்மணத்தில் வெகுநாட்களுக்கு முன் என்னுடைய blog-ய் register செய்திருந்தேன். ஆனால் ஒவ்வொரு பதிவையும் அங்கு notify செய்வதில்லை.(எதற்கு வீண்வம்பு என்றுதான் :))