கண்களை இறுக்கமூடி
கைகளை விரித்து
கால்களை உதைத்துக் கொண்டு
வீறிட்டு அழத் துவங்கிவிட்டது
குழந்தை.
பசியினாலா
பரிட்சயமில்லா முரட்டு முகங்களின்
அன்பில்லாக் குரல் கேட்ட
பயத்தினாலா
இனம் புரியாத வலிகளை
வார்த்தைகளில் சொல்லத் தெரியாத
இயலாமையினாலா
யாருக்கும் தெரியவில்லை.
எங்கோ இருந்த நீ
அழுகுரல் கேட்டதும்
கண்ணீர் மல்க ஓடி வந்து
இருகைகளில் குழந்தையை வாரியெடுத்து
முத்தமிட்டு மார்போடு அணைத்துக் கொள்கிறாய்.
தன் பிஞ்சுக்கரங்களை
உன் கழுத்தோடு கட்டிக்கொண்டு
சாந்தமாய் இப்போது உறங்குகிறது
என் மனதும்.
/22nd Jan, 2007
3 comments:
சில சமயங்களில், நமது மனம் ஒரு குழந்தையாகவே இருக்க ஆசைப்படுகிறது.. அன்புக்கு ஏங்குகிறது.. அன்பை பொழியும் சிலர் நம் அருகில் இருந்தால், மனம் சந்தோசத்தில் சாந்தமடைகிறது..
மனதில் ஏற்படும் கலவரங்களையும், அதன் தேவைகளையும் அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது இந்த கவிதை.
Nice comment Anand. கவிதையின் முழு அர்த்தத்தையும் சரியாக புரிந்து வெளிப்படுத்தியமைக்கு நன்றி !!
Post a Comment