Sunday, December 27, 2009

அம்மாவைக் காணக்கிடைத்தல்

நினைவு தெரிந்த நாள் முதலாய்
எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும்
அம்மாவைத் தான் பார்த்திருக்கிறேன்

'கழுத்தில் மாலை விழுந்த நாளிலிருந்து'
இந்த ஓட்டம் தொடங்கியதாக
அம்மா நினைவுகூர்வதுண்டு
கண்ணீரோடும்
சில நேரம் சிரிப்போடும்

இன்று அவள் சுமைகளை இறக்கி
கைத்தாங்கலாக
இரயிலில் இருந்து அழைத்து வந்து
குளிருக்கு கம்பளி போர்த்தி
பகல்நேரம் அயர்ந்து உறங்கும்
அம்மாவைக் காணக்கிடைத்திருப்பது
ஆறுதலாக இருக்கிறது

பயமாகவும் இருக்கிறது

Monday, December 7, 2009

பைத்தியக்காரன்

திட்டங்கள் தீட்டி
வியூகம் வகுத்து
நேர்த்தியாய் பேசி
நேரம் பார்த்து தாக்கி
வேண்டிய அளவு குழைந்து
இடம் பார்த்து குரலுயர்த்தி
தேவைக்கேற்ப  விடுத்து எடுத்து
பட்டும்படாமல் முன்னகர்ந்து
சிரிப்பில் சமாளித்து
பரிசுத்தமான பிம்பம் பொருத்தி
நீங்கள்
வெற்றி மகுடம் சூடிக் கொண்டீர்கள்.

நானோ
வெறும் பாசம் கொண்டலைந்து
பைத்தியமானேன்.

Monday, November 23, 2009

வேறுபாடு

விரும்பியதெல்லாம்
கிடைத்து விடுகிறது
என்றாவதொரு நாள்.

விரும்பிய போதே
கிடைத்து விடுவதில்
வேறுபடுகிறது
உன் வாழ்க்கையும்
என் வாழ்க்கையும்.

Wednesday, November 18, 2009

சுகித்தல்

இந்த
மண் போல்
மரம் போல்
கிளை போல்
இலை போல்
மலர் போல்
சுகிக்க வேண்டும்
மழையை.

Saturday, October 24, 2009

கலையும் கவிதைகள்

வட்டத்துக்குள் உத்வேகத்துடன்
ஓடத் தொடங்குகிறேன்
எல்லோரும் பயணிக்க
இதோ உருண்டோடும்
என் வாழ்க்கை

சற்று கண்ணயர சாய்ந்தவனை
ஓங்கி முதுகில் அறைந்து
உலுக்கும் யதார்த்தத்தில்
ஏதும்
குறையொன்றுமில்லை
குறையொன்றுமில்லை

என்றாலும்
ஒரு கவிதைக்கான தருணங்கள்
இப்போதெல்லாம்
மிக எளிதாகக் கலைவதில்
சிறிது வருத்தம் தான்

என்றாலும்
அதனால் ஏதும்
குறையொன்றுமில்லை
குறையொன்றுமில்லை.

Wednesday, September 2, 2009

தூக்கம் எனும் வரம்

"நான் தூங்கப்போறேன்பா"
சொன்ன இரண்டாம் நிமிடத்தில்
பூப்போல்
உறங்கிவிடுகிறாள் மனைவி.

ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தவன்
"என்ன இரகசியம்பா"
என்று ஒருநாள் கேட்டேன்.

"மனசை லேசா வச்சுக்கணும்
மண்டைல நிறைய போட்டு குழப்பக்கூடாது
அப்புறம் இதுமாதிரி தூங்கறவங்கள பார்த்து
கண் வைக்கக் கூடாது" என்று சிரித்தாள்.

அன்றைய இரவும்
உலகத்தை எடுத்துக் கொண்டு
என்னிடம் வந்து படுத்தேன்.
ஒரு கட்டத்தில்
மனதை லேசாக வைத்திருப்பதைப் பற்றி
தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினோம்.

பூப்போல் மனைவி
உறங்கிக் கொண்டிருந்தாள்.

Thursday, August 13, 2009

தடயங்களை அழித்தல்

தினமும் அலுவலகம் செல்லும் வழியில்
இருபுறமும் வரிசையாக கைகோர்த்து
புன்னகைத்து வழியனுப்பும் மரங்களை
சாலை மேம்பாட்டுப் பணிகளின் பேரில்
வெட்டத் தொடங்கியிருந்தார்கள்.

சடசடவென சிலநாட்களில் வீழ்த்தப்பட்டு
வரிசையில் கடைசியாக
ஒரு மரம் மட்டும் தப்பிப் பிழைத்தது.

எஞ்சியிருந்த ஒற்றை மரம்
தாங்கவியாலா தன் இருப்பின் அவஸ்தைகளை
காற்றினில் கவிதைகளாக
ஒரு கொலைக்களத்தின் தடயங்களை
திருச்சபை முன் முறையீடாக
வருவோர் போவோரிடம்
அரற்றிக் கொண்டிருந்தது.

போக்குவரத்து நெரிசலில்
எரிச்சலோடு விரல்கள்
ஹாரனை அழுத்திக் கொண்டிருந்தன.

இளநீர் விற்பவன்
இந்த மரத்திற்கு
இடம் மாறியிருந்தான்.

Friday, June 26, 2009

இந்த நாளில்

விரும்பி வாங்கிய புத்தகம்
வீசி எறிந்ததில் கிழிந்தது

தேடித்தேடி வண்ணம் சேர்த்து
நெடுநேரம் சிரத்தையோடு
வரைந்த ஓவியம்
முடித்ததும் நிறமிழந்து போனது

இருகை விரித்தழைக்கும்
என் பிள்ளையின் மழலைச் சிரிப்பை
எளிதாக நிராகரித்துப் போகிறேன்

மனிதத்தின் தோலுரிந்து தசைகள் முறுக்கி
ஈறு தெரிய என் மிருகம் உறுமுகிறது

உன் துரோகத்தின் நினைவுகளை
சுமந்து நிற்கும் இந்த நாள் முழுதும்
போதனைகள் கடந்து
வன்மம் கொண்டலைகிறது
என் பிரேதம்.

Tuesday, April 28, 2009

பதிவுத் தபாலில் புத்தகம்

பதிவுத் தபாலில் புத்தகம்
வந்து சேர்ந்தது

தடிமனான நூற்கயிற்றால் இறுக்கியதில்
மூச்சுத்திணறி
நாற்புறமும் தடம் பதிந்திருந்தது

கடைசி இருபத்தியேழு பக்கங்கள்
அலட்சியமாக மடங்கி நைந்திருந்தது

ஒரு பக்கத்து அட்டை மழைநீர் இறங்கி
ஈரம் கோர்த்திருந்தது

கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது
எழுதியவனுக்கு எப்படியிருக்குமோ

Tuesday, April 21, 2009

இங்கு வாருங்கள்

பொருள் சார்ந்த உலகத்தின் பல்சக்கரங்களில்
கவலைக்கிடமான வகையில்
வசமாக சிக்கிக் கொண்டீர்கள்

எலும்பு கண்டு பின்னலையும்
நாயொன்று முச்சிரைக்க
உங்களுக்கு அடுத்தபடியாக
ஓடிக்கொண்டிருக்கிறது

எத்தனை தான் சேர்த்தாலும்
இரவெல்லாம் தேடித்துரத்தியும் சிக்காமல்
விடியலுக்கு அருகில்
விழிகளின் இரத்தத் தீற்றலாய்
தினமும் இறக்கும் உங்கள் உறக்கம்

பெட்டிக்குள் இருக்கும் பெட்டிக்குள் இருக்கும் பெட்டிக்குள்
ஒளிந்திருக்கும் வாழ்க்கையென
பணச்சாவி தேடித்தேடி அழிந்தீர்கள்

போதும் இனி இங்கு வாருங்கள்
வாழப் படிக்க வாருங்கள்
உங்கள் குப்பைக்கூடங்களை சுத்தம் செய்து
ஆழ்ந்த தியானத்தின் ஜோதியில் புதுப்பித்து
புலன்களைத் திறந்து
பிரபஞ்சத்தின் உயிர்துடிப்பு
உங்களுக்குள் கேட்கச் செய்கிறோம்

உங்கள் உற்றார் உறவினர்
நண்பர்களுக்கும் சொல்லுங்கள்
இருக்கைக்கு முந்துங்கள்
நான்கு நாள் வகுப்புக் கட்டணம்
வெறும் ஆயிரத்து நானூறு மட்டுமே

/22 Apr 2009

Monday, April 6, 2009

அப்பா வந்திருந்தார்

நேற்று அப்பா வந்திருந்தார்.

இப்போதெல்லாம் குடிப்பதை
நிறுத்திவிட்டதாகவும்
அம்மாவின் காயங்களுக்கு மருந்திட்டபோது
தவிர்க்க முடியாத கண்ணீர்
மன்னிப்பு என்ற சொல்லில்
தெறித்ததையும் சொன்னார்.

கையாடல் செய்த பணத்தை
அலுவலகத்தில் திருப்பி செலுத்திவிட்டதாகவும்
தான் துரோகம் இழைத்த நண்பரொருவரை
நேரில் சந்தித்தது
வருத்தம் தெரிவித்ததையும் சொன்னார்.

நான் பேசிய மேடையிலிருந்து
கடைசி வரிசையில் யாரும் அறியாமல்
நின்று இரசித்ததை சொல்லும் போது
சிறிது கலங்கினார்.

பேரப்பிள்ளைகளின் பெயர்
கேட்டுக் கொண்டார்.
அவர்களுக்கு தான் சொல்ல விரும்பும்
கதைகளைப் பற்றி அவர் ஆரம்பித்த போது
நானும் கேட்கலாமா என்று கேட்டுக்கொண்டே
அவசரத்தில் விழித்து விட்டேன்.

ஒரு நீண்ட பொழுதின் அயர்ச்சிக்குப் பிறகு
மீண்டும் அப்பா வரும் கனவுக்காக
காத்திருக்கத் தொடங்கினேன்.

/6th April, 2009.

Tuesday, January 6, 2009

பலி

ஞானச்செறுக்கேறி சித்தனாய் பித்தனாய்
காடூடே போனவனும்

மேலான பொருள் தேடும் வேட்கையோடு
பேரண்டம் புரட்டிவிடப் புறப்பட்டவனும்

மோகம் வழிந்தோடும் மெல்லிரவில்
சதைப்பிண்டம் குத்தித் தின்று
போதை தலைக்கேறும் உச்சத்தில்
சித்தாந்தக் கூவலோடு சரிந்தவனும்

உண்டு கழித்துறங்கி வேறொன்றும் உணராமல்
மந்தைக்குள் பயமின்றி ஒளிந்திருக்கும் மூர்க்கனும்

மிக உரிமையோடு சிதைக்கக்கூடும்
முன்பொருநாள்
குருவிகள் வந்தமரும் மரக்கிளையில்
அண்ணாந்து ஊஞ்சலாடும்
சின்னப்பெண்ணொருத்தி
சிருஷ்டித்த கனவுகளை.

/6th Jan, 2009