Friday, February 23, 2007

கனவுகள் உடையும் சத்தம்

கனவுகள் உடையும் சத்தம்
கேட்டதுண்டா ?

நீண்டு செல்லும் இருண்ட குகைபோல்
குரூரமான நிசப்தம் சூழ்ந்த பின்னிரவில்
விட்டம் பார்த்து வெறித்த பார்வையில்
கண்ணீர் ஒருதுளி திரண்டு
கன்னம் வந்து தொட்டதும்
காதைக் கிழிக்கும் சத்தத்தோடு
உடைந்து நாற்புறம் சிதறும்
ஆசைகட்டி அழகு பார்த்த
அத்தனை ஆயிரம் கனவுகள்.

பொழுது புலர்ந்ததும் கண்கள் உலர்ந்ததும்
சிதறிய துகள்களைத் தேடியெடுத்து
இன்னொரு கனவைச் செய்து வைத்தால்
தொடரும் இரவில்
அதுவும் உடைந்து சிதறும்.

எத்தனை வண்ணமாய்
கனவுகள் சேர்த்தாலும்
அவை உடையும் சத்தம் மட்டும்
என்றும் ஒன்றாகவே இருக்கிறது.

/23 Feb, 2007

4 comments:

Anitha Jayakumar said...

எல்லோரும் உணர்வதுதான் என்றாலும் அதை கவிதையாக்க உங்களால் தான் முடிகிறது. நான் முன்பே சொன்னதுபோல், நமக்கு இப்படி எழுதத் தோணலையே என்று இம்முறையும் நினைத்துக்கொண்டேன்.

/எத்தனை வண்ணமாய்
கனவுகள் சேர்த்தாலும்
அவை உடையும் சத்தம் மட்டும்
என்றும் ஒன்றாகவே இருக்கிறது.
/

வரிகள் பெருமூச்செறிய வைத்தன.

Jana said...

Ganesh...simply superb da!

vaarthaigalum...yennangalum...aththunai azhagu!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்போது தான் உங்கள்
பக்கம் வந்து படிக்கிறேன்.
கனவுகள் உடைவதன்
சத்தம் ஒன்றாகவே இருக்கிறது
என்பதை உணரமுடிகிறது.
ஏனென்றால் என் கனவுகள்
உடைந்ததை நானும் உணர்ந்ததால்..
பின்பு வந்து மற்றவற்றை வாசிக்கிறேன்.

-ganeshkj said...

இந்த கவிதையைப் பற்றி எனக்கிருக்கும் ஒரு சின்ன ஏமாற்றம் இதை positive note-ல் முடிக்கவில்லை என்பது தான். சோகத்திலிருந்து தெளிவைத் தந்து நம்மை மீட்டெடுக்காமல் அருகில் அமர்ந்து கொண்டு சேர்ந்து அழும் வகையைச் சார்ந்தது இந்த கவிதை. அதுவும் ஒரு வகை ஆறுதலே என்பதால் அப்படியே விட்டு விட்டேன்.

எத்தனை முறை உடைந்தாலும் மீண்டும் மீண்டும் கனவுகளைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.