Wednesday, October 25, 2006

தேங்கிக் கிடப்பவை

மலர்ந்த தருணம் எதுவென்று அறியவில்லை
அத்தனை இதழ்களிலும் தெளிவான அழகு
வலிக்குமோ என்றபடி தயங்கித்திரளும் பனித்துளி
சுற்றிலும் அமைதியோடிழைந்த நறுமணம்
அப்படித்தான் உணர்ந்ததாய் ஞாபகம்
என் நினைவறையில் முதன்முதலாய்
சேர்த்து வைத்த உன் பிம்பத்தை.

சில பரிட்சயங்கள் கடந்து
என்னில் தன் ஆளுமை உறுதியானபின்
அவ்வப்போது உன் பிம்பம்
இறுகிக் கனத்து சுதாரித்து இயல்பானதில்
எழுந்த என் தத்தளிப்பை
சிரித்து மழுப்பி பழகிக்கொண்டேன்.

காலச்சூட்டில் மயக்கங்கள் விலகி
விழுந்த வெளிச்சத்தில்
உன் பிம்பத்தின் விகாரம் ஓங்கி வளர
பற்றிக்கிடந்த என் நினைவுகள்
மூர்ச்சையடைந்து விழுந்தன.

காணக்கிடைக்காமல்
உன் பிம்பம் கலைந்துபோய்
காலம் வெகுவாகிப் போனாலும்
என் நினைவறையில்
இன்றும் தேங்கிக் கிடக்கின்றன -

அந்த இதழ்களின் நறுமணமும்
நீ சொறுகிய வார்த்தையில்
சொட்டும் என் இரத்தமும்.

/25 Oct, 2006

Sunday, October 8, 2006

கவிப்பயன்

இதனால் அறியப்படுவது யாதெனின்
இன்றைய தேதியில் கவிதைகளால்
வேறொன்றும் பயனில்லை.

தன் அதிமேதாவித்தனத்தை
பிரகடனம் செய்து
எழுதும் ஒவ்வொரு எழுத்தையும்
காகிதப்பணமாய் பண்டமாற்றும் வித்தை
கைவரப் பெற்று
பக்கம் நான்கு வரிகள் நிறைத்து
புத்தகம் பத்து வெளியிட்டு
மொழியைப் பிழிந்தெடுத்து
பட்டங்கள் சூடிக் கொண்டு
காதலர்கூட்டத்தின் கரகோஷம் பெற்று
அதில் கயல்விழிப் பெண்ணொருத்தி
கையொப்பம் கேட்காமற் போனால்

இன்றைய தேதியில் கவிதைகளால்
வேறொன்றும் பயனில்லை.

இந்த சப்தங்கள் எட்டாத தூரத்தில்
மனத்தின் இருட்டறையில் காயங்கள் சுமந்து
சுருண்டு கிடந்தவனை
பாந்தமாய் தொட்டெழுப்பி
சன்னலொன்றைத் திறந்து வைத்து
வானமாய் விரிந்து கிடந்தது
ஒரு கவிதை.

/8th Oct, 2006

அவர்கள்

சிகரம் ஏறி சிறகு விரித்து
உயரப்பறந்து வானுயரப்பறந்து
மேகம் கடந்து மேனி சிலிர்த்து
கண்கள் மூடி உள்ளம் விழிக்க
பாவம் இது பசிமயக்கம் எனச்சொல்லி
தெருவோரம் சீட்டெழுதித் தந்தார்கள்.
கூழுக்கு வரிசை கட்டி
கும்பிடச் சொன்னார்கள்.

வேண்டாத ரோமங்கள் எனக்காட்டி
என் சிறகுகளைச் சிரித்தார்கள்.

எண்ணங்கள் செதுக்கியொரு சிலைவடிக்க
எத்தனைக்கு விலைபோகும்
என்று மட்டும் கேட்டார்கள்.

சின்னச்சறுக்கல்களில் உணர்வுகள்
சிராய்த்து நோகும் போது
உள்ளம் பகிர்ந்து கொள்ள ஓர்
உறவுக்கரம் தேட
புண்ணியம் சேர்க்க வழியாச்சு
எங்கே உன் பிச்சைப்பாத்திரம் என்றார்கள்.

எத்தனை முயன்றாலும்
சொல்லிப் புரிவதில்லை என்பதால்
புன்னகைத்து அவர்களைக் கடக்கின்றேன்.
பசிமயக்கம் போய் இப்போது பார்
தின்ற கொழுப்பு என்கிறார்கள்.

/8th Oct, 2006

Wednesday, October 4, 2006

என்னை அறிவீரா?

மழலை வாய்மொழிக் குழறலாய்
சிதறிக் கிடப்பேன் -
அள்ளிக் கோர்த்தெடுத்து எந்தன்
அர்த்தம் படிக்கத் தெரியுமா ?

காற்றாடும் காய்ந்த இலைப்பரப்பில்
பச்சைய மிச்சமாய் ஒட்டிக்கிடப்பேன் -
என் வண்ணம் அறியும்
வகை அறிவீரா ?

உண்ர்வோடு ஒட்டாத சப்த இரைச்சலில்
அறுபட்ட மெளனம் ஒன்று
அலறித் துடித்து இறக்கையில்
திறக்கின்ற செவிகள் உண்டா ?

மரத்தாயின் மடிமண்ணில்
மடிந்திருக்கும் பூமக்கள்
சடலம் அள்ளும் காற்றோடு மன்றாடும்
அவள் வேதனைக்குத் தோழைமையாய்
நின்றிருப்பேன் - என்னை அறிவீரா ?

/2001