எங்கோவோர் இடுக்கில் சிறுதுகளாக ஒட்டிக்கொண்டோ
காற்றினில் இந்த இறகைப் போல் மிதந்துகொண்டோ
அல்லது எதனுள்ளோ பொதிந்திருந்து
எப்போதும் சுருங்கி விரிந்து
துடித்துக் கொண்டே இருக்கிறதா
இந்தப் பிரபஞ்சம் ?
இருளோ ஒளியோ இடமோ காலமோ
இதற்குள் மட்டும் தான் பொருள்படுமா ?
எனின் பிரபஞ்சம் இல்லாத பெருவெளியில்
என்ன இருக்கும் ?
யாரிடம் யார்
கெஞ்சிக் கூத்தாடி கேட்டதின்பேரில்
இப்படிக் கிறுகிறுத்துச் சுழல்கின்றன
இத்தனை கிரகங்கள் ?
எதையுமே இலட்சியம் செய்யாமல்
திமிறும் இதன் காலவெள்ளத்தில்
குதூகலித்து கூப்பாடு போட்டு - பின்
கரையொதுங்கி நாறும் சடலமாக
ஏன் இத்தனை உயிர்கள் ?
ஒன்றுமே பேசத் தோன்றவில்லை.
கையிலிருந்த உளுந்துருண்டையில்
ஊர்ந்து சென்ற எறும்புகளை ஊதித் தள்ளிவிட்டு
ஒரே விழுங்களில் சில கிரகங்களைத் தின்று செரித்தபடியே
உறங்கிப் போனேன்.
/11th July, 2007
5 comments:
உங்களுக்கு வேலை வெட்டி ஏதும் இல்லன்னு நினைக்கிறேன்.. அப்பிடியா?
ஏங்க இப்டி அநியாயத்துக்கு யோசிக்கிறீங்க?
//எதையுமே இலட்சியம் செய்யாமல்
திமிறும் இதன் காலவெள்ளத்தில்
குதூகலித்து கூப்பாடு போட்டு - பின்
கரையொதுங்கி நாறும் சடலமாக
ஏன் இத்தனை உயிர்கள் ?//
கிண்டல் பண்ணல! நிஜமாவே நல்லாருக்கு கவிதை..
//ஏங்க இப்டி அநியாயத்துக்கு யோசிக்கிறீங்க?//
அப்படித்தான் எனக்கும் தோன்றியது. அதனால் தான் கவிதையின் முடிவில் உளுந்துருண்டை சாப்பிட போய்விட்டேன் :)
நன்றி காயத்ரி.
"பிரபஞ்சம் இல்லாத பெருவெளியில்
என்ன இருக்கும் ?"
- விடை காண இயலாத கேள்விகளுள் இதுவும் ஒன்று. சிந்தனை விரிவின் சான்றோ ?.. சிந்தனை சரியாக இருக்கும் பட்சத்தில், சிந்திப்பதில் தவறேயில்லை..
மனிதராய் பிறந்து சிந்திக்காது இருத்தல் மன்னிக்க முடியாத குற்றம்..
தொடர்ந்து சிந்திக்கவும்.. கவிதை அழகு.
நானும் சிலசமயங்களில் நினைத்துப் பார்த்ததுண்டு. நம்மால் அள்ளி ஊற்றப்படும் ஒரு குவளைத் தண்ணீர் எறும்புகளைப் பொறுத்தவரை 'சுனாமி'. அவ்வாறே இந்தப் பேரண்டத்தின் முன் நாமும் எறும்புகளே. கடலுக்கு ஒரு தடவை ஜலதோசம் வந்தபோது உறிஞ்சிய உறிஞ்சலில் எத்தனை உயிர்கள் அழிந்தன. வானம் கொஞ்சம் பூமியை நெருங்கி இறங்கிவந்தால் என்னவாகும்? காற்று ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டால் என்ன நிகழும்? சும்மா கற்பனைதான். நீங்கள் அதைக் கவிதையாக்கியிருக்கிறீர்கள்.
Post a Comment