Saturday, July 7, 2007

மந்தை

மந்தையில் சேர்ந்திடாமல் இருப்பதிலே
எப்போதும் குவிந்திருக்கிறது
என் மொத்த கவனமும்.

உங்களுக்கு சிறிது கூட
வெட்கமே இல்லையா மந்தைகளே
என்பது போன்ற ஞானத்தின் கேள்விகளை
கொழுந்து விட்டெரியும் தீப்பந்தாய் உருட்டி
குறிபார்த்து எறிந்தாகிவிட்டது.

மார்தட்டி முழக்கமிட்டு
எதிர்வைத்த வாதங்களை ஒரு கைபார்த்ததில்
என் பேனா முனையில் இரத்தம் தோய்ந்தது.

இயல்பில் கால்சுற்றும் தளைகளை
சீ அற்பங்களே எனக் கட்டறுத்து
வெகுதூரம் விலகி ஓடியதில்
தற்சமயம் எங்கிருக்கிறேன் என்பதே
தெரியாமல் கேட்டபோது
நிசப்தம் இருளேற்றுமொரு பின்னிரவில் -
மந்தையில் சேர்ந்திடாத மந்தை
என்ற பதில் வருகிறது.

/7th July, 2007

1 comment:

AKV said...

சுவராஸ்யமான ஒரு கவிதை.

உன்னுடைய "தனித்துவத்தை" எடுத்துக் காட்டுகிறது.

சந்தோசமா நண்பரே ??? ..
ஹா ! ஹா !! ஹா !!!

மாயை ! எல்லாமே மாயை !!..