Sunday, March 30, 2008

அறிவுரை

"புதுமெட்டியின் உறுத்தல்
பழகி விடும்
தினமும் குங்குமமிட்டு தாலியை
கணவன் காண கண்களில் ஒற்றிக் கொள்
அன்போடிரு பக்தியோடிரு
நிச்சயம் மனதில் இடம் பிடிப்பாய்
பிடிவாதமும் எதிர்வாதமும்
பெண்களுக்கு கூடாது
பொறுத்துப் பொறுத்துப் பூமியாள்
அனுசரித்து நடந்து கொள்"
அவளுக்குச் சொல்கிறார்கள்.

"தொப்பையை குறைங்க மாப்ளே சார்"
அவனுக்குச் சொல்கிறார்கள்.

/30th March, 2008.

Friday, March 21, 2008

வழியனுப்புதல்

இருளடர்ந்த இரவொன்றில்
திருமண சொர்கத்திலிருந்து செங்குத்தாய் கீழிறங்கி
பிறந்தகம் வந்துசேர்ந்த என் செல்ல மகள்
தட்டாதே எனச்சொல்லிவிட்டு
தன்னறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள்.

நான் தொட்டுணர்ந்த அவள் பிஞ்சுப்பாதங்களின்
மென்மையை ஒத்திருந்த கனவுகளை
அங்குதான் அவள் வளர்த்திருந்தாள்.

விழிகள் விரட்டியதில் வெட்கம் தின்ற
தன் முதல் தாவணி
வெண்புரவியில் வீற்றிருக்கும்
இராஜகுமாரனின் வருகைக்கான டைரிப்பக்கங்கள்
சில ஓவியங்கள் பாடல்வரிகளோடு கவிதைத்துண்டுகள்
இவை தவிர்த்து
பிணமொன்று அங்கே கண்டதாய்
அலறிக்கொண்டே வெளியோடி வருபவளை
நெஞ்சோடு தாங்கிக் கொண்டு
இன்னபிற இன்னபிற
நியதிகள் சிக்கல்கள் விளக்கி
வழியனுப்பி வைக்கின்றேன்
வெறும் பிரார்த்தனையோடு.

/21st March, 2008.