Wednesday, July 11, 2007

உளுந்துருண்டை

எங்கோவோர் இடுக்கில் சிறுதுகளாக ஒட்டிக்கொண்டோ
காற்றினில் இந்த இறகைப் போல் மிதந்துகொண்டோ
அல்லது எதனுள்ளோ பொதிந்திருந்து
எப்போதும் சுருங்கி விரிந்து
துடித்துக் கொண்டே இருக்கிறதா
இந்தப் பிரபஞ்சம் ?

இருளோ ஒளியோ இடமோ காலமோ
இதற்குள் மட்டும் தான் பொருள்படுமா ?
எனின் பிரபஞ்சம் இல்லாத பெருவெளியில்
என்ன இருக்கும் ?

யாரிடம் யார்
கெஞ்சிக் கூத்தாடி கேட்டதின்பேரில்
இப்படிக் கிறுகிறுத்துச் சுழல்கின்றன
இத்தனை கிரகங்கள் ?

எதையுமே இலட்சியம் செய்யாமல்
திமிறும் இதன் காலவெள்ளத்தில்
குதூகலித்து கூப்பாடு போட்டு - பின்
கரையொதுங்கி நாறும் சடலமாக
ஏன் இத்தனை உயிர்கள் ?

ஒன்றுமே பேசத் தோன்றவில்லை.

கையிலிருந்த உளுந்துருண்டையில்
ஊர்ந்து சென்ற எறும்புகளை ஊதித் தள்ளிவிட்டு
ஒரே விழுங்களில் சில கிரகங்களைத் தின்று செரித்தபடியே
உறங்கிப் போனேன்.

/11th July, 2007

Saturday, July 7, 2007

மந்தை

மந்தையில் சேர்ந்திடாமல் இருப்பதிலே
எப்போதும் குவிந்திருக்கிறது
என் மொத்த கவனமும்.

உங்களுக்கு சிறிது கூட
வெட்கமே இல்லையா மந்தைகளே
என்பது போன்ற ஞானத்தின் கேள்விகளை
கொழுந்து விட்டெரியும் தீப்பந்தாய் உருட்டி
குறிபார்த்து எறிந்தாகிவிட்டது.

மார்தட்டி முழக்கமிட்டு
எதிர்வைத்த வாதங்களை ஒரு கைபார்த்ததில்
என் பேனா முனையில் இரத்தம் தோய்ந்தது.

இயல்பில் கால்சுற்றும் தளைகளை
சீ அற்பங்களே எனக் கட்டறுத்து
வெகுதூரம் விலகி ஓடியதில்
தற்சமயம் எங்கிருக்கிறேன் என்பதே
தெரியாமல் கேட்டபோது
நிசப்தம் இருளேற்றுமொரு பின்னிரவில் -
மந்தையில் சேர்ந்திடாத மந்தை
என்ற பதில் வருகிறது.

/7th July, 2007