Monday, March 3, 2025

உன்னதம்

ஒரு பெண்ணின்

 

மாறாத பேரன்பில்

மன்னிக்கும் கருணையில்

 

உள்ளங்கை கதகதப்பில்

உச்சிமுகரும் பெருமிதத்தில்

 

கண்பார்வையின் நிழலில்

கண்டிக்கும் அக்கறையில்

 

வழிநடத்தும் பிரார்த்தனையில்

வலி ஆற்றும் புரிதலில்

 

வாழ்ந்துவிடுவதைத் தவிர

 

வேறென்ன உன்னதம்

வாய்த்துவிடும்

இந்த வாழ்க்கைக்கு


-ganeshkj

Sunday, February 23, 2025

பெருமூச்சு

திருமணம் முடித்து
பிள்ளைகள் பெற்றெடுத்து

வளர்த்து ஆளாக்கி

பேரன் பேத்திகள் பார்த்து

ஆடி அசந்து

நடைதளர்ந்து

நினைவுகளை அசைபோட்டு

உயிர்க்கும் போதும் -

 

வாழ்வில் நிகழாமலே போய்விட்ட

காதல் வந்து

கண்கள் கசக்கும்

 

பொங்கும் பெருமூச்சின் அனற்காற்று

யாரும் காணாமல் அவசரமாய்

கண்ணீர் உலர்த்தும்


-ganeshkj


Tuesday, April 30, 2024

எந்தையும் தாயும்

துள்ளத் துடிக்க
வெட்டி எடுக்கப்பட்ட
புரையோடிய உறுப்பு -
என் தந்தை.

கொட்டும் உதிரம் நிறுத்த
தீயிட்டுப் பொசுக்கி
எஞ்சிய உயிர் தாங்கும் உடல் -
என் தாய்.

ஊன் கருகும் நெடியும்
உள்ளறுக்கும் வீறலும் -
என் பால்யம்.

-ganeshkj



Thursday, July 9, 2020

வந்து சேர்பவன்

எத்தனைதான் எழுதினாலும்
போய் சேரவேண்டும் இல்லையா
இல்லையென்றால்
எழுதுவானேன் ?

இன்றில்லை என்றாலும்
என்றாவதொருநாள்
வந்து சேர்வான் இல்லையா
அதற்காகத் தான்

Friday, July 3, 2020

அப்பாவின் பள்ளம்

இங்கிருந்து அங்கு செல்வதுதான்
வாழ்க்கை

குளிரூட்டப்பட்ட காரில்
இசையைத் தெறிக்கவிட்டு
நரம்பு புடைக்க கத்தியபடி
கடந்திருக்கலாம்

மாட்டுவண்டி கட்டிக்கொண்டு
மக்களை சேர்த்துக்கொண்டு
மெல்லிசை முனுமுனுத்தபடி
மெதுவாக கடந்திருக்கலாம்

தோளில் சுமந்தபடி
தீராக்கதை பேசி
வழிப்பாதை இரசித்து
நடந்தும் கடந்திருக்கலாம்

கூடவரவில்லை என்றாலும்
அக்கறையாய் அறிவுரை சொல்லி
அன்போடு வழிகாட்டி
அனுப்பியாவது வைத்திருக்கலாம்

மாறாக
தானே பெரிய பள்ளம் தோண்டி
தலைகுப்புற அதில் விழுந்து
தள்ளாடிச் சாய்ந்துகிடந்தார்
அப்பா

இங்கிருந்து அங்கு கயிறுகட்டி
அதில் நடந்தபடியோ
தொங்கியபடியோ
கடந்துகொண்டிருக்கிறது
வாழ்க்கை

Saturday, December 14, 2019

ஈரம்

அலட்சியமாய்
நீங்கள் சுண்டியெறிந்த
என் கண்ணீர்
கவிதையில் விழுந்தது

அலட்சியமாய்
நீங்கள் சுண்டியெறிந்த 
என் கவிதை
இன்னும் காய மறுக்கிறது

Friday, May 17, 2019

இந்த மரங்கள்

குளித்து முடித்து
ஈரம் சொட்ட
நீ வரும் அழகை
நினைவுபடுத்துகின்றன
மழையில் நனைந்த
ஈரம் காயாத
இந்த மரங்கள்