Tuesday, April 28, 2009

பதிவுத் தபாலில் புத்தகம்

பதிவுத் தபாலில் புத்தகம்
வந்து சேர்ந்தது

தடிமனான நூற்கயிற்றால் இறுக்கியதில்
மூச்சுத்திணறி
நாற்புறமும் தடம் பதிந்திருந்தது

கடைசி இருபத்தியேழு பக்கங்கள்
அலட்சியமாக மடங்கி நைந்திருந்தது

ஒரு பக்கத்து அட்டை மழைநீர் இறங்கி
ஈரம் கோர்த்திருந்தது

கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது
எழுதியவனுக்கு எப்படியிருக்குமோ

Tuesday, April 21, 2009

இங்கு வாருங்கள்

பொருள் சார்ந்த உலகத்தின் பல்சக்கரங்களில்
கவலைக்கிடமான வகையில்
வசமாக சிக்கிக் கொண்டீர்கள்

எலும்பு கண்டு பின்னலையும்
நாயொன்று முச்சிரைக்க
உங்களுக்கு அடுத்தபடியாக
ஓடிக்கொண்டிருக்கிறது

எத்தனை தான் சேர்த்தாலும்
இரவெல்லாம் தேடித்துரத்தியும் சிக்காமல்
விடியலுக்கு அருகில்
விழிகளின் இரத்தத் தீற்றலாய்
தினமும் இறக்கும் உங்கள் உறக்கம்

பெட்டிக்குள் இருக்கும் பெட்டிக்குள் இருக்கும் பெட்டிக்குள்
ஒளிந்திருக்கும் வாழ்க்கையென
பணச்சாவி தேடித்தேடி அழிந்தீர்கள்

போதும் இனி இங்கு வாருங்கள்
வாழப் படிக்க வாருங்கள்
உங்கள் குப்பைக்கூடங்களை சுத்தம் செய்து
ஆழ்ந்த தியானத்தின் ஜோதியில் புதுப்பித்து
புலன்களைத் திறந்து
பிரபஞ்சத்தின் உயிர்துடிப்பு
உங்களுக்குள் கேட்கச் செய்கிறோம்

உங்கள் உற்றார் உறவினர்
நண்பர்களுக்கும் சொல்லுங்கள்
இருக்கைக்கு முந்துங்கள்
நான்கு நாள் வகுப்புக் கட்டணம்
வெறும் ஆயிரத்து நானூறு மட்டுமே

/22 Apr 2009

Monday, April 6, 2009

அப்பா வந்திருந்தார்

நேற்று அப்பா வந்திருந்தார்.

இப்போதெல்லாம் குடிப்பதை
நிறுத்திவிட்டதாகவும்
அம்மாவின் காயங்களுக்கு மருந்திட்டபோது
தவிர்க்க முடியாத கண்ணீர்
மன்னிப்பு என்ற சொல்லில்
தெறித்ததையும் சொன்னார்.

கையாடல் செய்த பணத்தை
அலுவலகத்தில் திருப்பி செலுத்திவிட்டதாகவும்
தான் துரோகம் இழைத்த நண்பரொருவரை
நேரில் சந்தித்தது
வருத்தம் தெரிவித்ததையும் சொன்னார்.

நான் பேசிய மேடையிலிருந்து
கடைசி வரிசையில் யாரும் அறியாமல்
நின்று இரசித்ததை சொல்லும் போது
சிறிது கலங்கினார்.

பேரப்பிள்ளைகளின் பெயர்
கேட்டுக் கொண்டார்.
அவர்களுக்கு தான் சொல்ல விரும்பும்
கதைகளைப் பற்றி அவர் ஆரம்பித்த போது
நானும் கேட்கலாமா என்று கேட்டுக்கொண்டே
அவசரத்தில் விழித்து விட்டேன்.

ஒரு நீண்ட பொழுதின் அயர்ச்சிக்குப் பிறகு
மீண்டும் அப்பா வரும் கனவுக்காக
காத்திருக்கத் தொடங்கினேன்.

/6th April, 2009.