Friday, February 23, 2018

Aftermath

when I was a kid
you left me in war field
and disappeared

I grew up in chaos
fought for many years
some part of me dead, but -
I managed to survive the war

as I limped my way back to peace
to the freedom I earned
what killed me
was the thought that
you abandoned me

Friday, October 27, 2017

பிராயச்சித்தம்

இருபதாம் வயதிற்கெல்லாம்
மூன்று குழந்தைகளை 
பெற்றெடுத்தபின்
விதவைக்கோலம் பூண்டு
எண்பது வயதுவரை
வாழ்ந்து நொந்தாள்
கொள்ளுப்பாட்டி.

வாழ்நாளெல்லாம்
கணவனின் கையை எதிர்பார்த்து
பின் மகன்களின் கையை எதிர்பார்த்து
தீரா கனவுகளின் சுமையோடு
கண்மூடினாள்
பாட்டி.

தள்ளாடும் கணவனிடம்
போராடித் தோற்று
பின் தன்னந்தனியாய்
பிள்ளைகளைக் காக்க
பெரும்யுத்தம் நடத்தி
கரை சேர்ந்து
துவண்டு விழுந்தாள்
அம்மா.

பாரதியின் புதுமைப்பெண்ணாய்
படித்து வேலை பார்த்து
வீட்டிலும் சுரண்ட
வெளியிலும் சுரண்ட
நாய்பிழைப்பென்று நொந்தாள்
தங்கை.

அதனால்தான் என்னவோ -
ஆண்டாண்டு காலமாய்
ஆண்குலம் இழைத்த பாவத்திற்கு 
சிறு பிராயச்சித்தம்
தேடுவதாய் உணர்கிறேன் -
அயர்ந்து படுத்திருக்கும் 
மனைவியின்
கால்பிடித்து விடும்போது.

Wednesday, May 3, 2017

என்னால் முடிந்தது

இல்லாத காரணம் சொல்லி
உன்னை தொலைபேசியில்
அழைத்திருக்கலாம்

மணிக்கொருதரம் ஏதேனும்
குறுஞ்செய்தி அனுப்பியிருக்கலாம்

சரியாக திட்டமிட்டு
நம் சந்திப்பை
நிகழ்த்தியிருக்கலாம்

பேச்சினூடே உன் புன்னகையின்
பேரழகை சிலாகித்து
சில வார்த்தைகள்
சேர்த்திருக்கலாம்

குறைந்தபட்சம்
உன் பிறந்தநாளன்று முதல்ஆளாக வாழ்த்தியிருக்கலாம்

என்ன செய்வது?
என்னால் முடிந்ததெல்லாம் -
பெருவனத்தில்
என்றேனும் நீ வந்து பறிக்க
காத்திருக்கும் ஒற்றை பூவாய்
உனக்கான ஒரு கவிதையை
எழுதிவிடுவது தான்.

Thursday, February 23, 2017

யாருக்குத் தெரியும்

மாபெரும் மலைதனை கடந்து
பேரிருள் படர்ந்த
அடர்வனத்திடை அலைந்து

செம்பூவிதழ் வேய்ந்த
பூங்குடில் வந்தடைந்து
காற்றென நுழைந்து - அதன்
கதவுகள் திறந்து

கால் கிழிக்கும்
கண்ணாடித்துண்டுகளாய்
சிதறிக்கிடக்கும் - உறைந்த
கண்ணீர்துளிகள் கடந்து

கண்ணுக்குப் புலப்படாத
இருட்டறையில் புதைந்திருக்கும்
பெட்டகத்துள் ஒளிந்திருக்கும்

என் இதயத்தின் திறவுகோல்
கண்டெடுக்க -
யாருக்குத் தெரியும் ?
கண்மணியே உனையன்றி
யாருக்குத் தெரியும் ?



Friday, January 20, 2017

பயணம்

கடும்பாதை
நெடும்பயணம்
கொடுஞ்சுமை

கொதிக்கும் மணல்
கொப்பளித்த பாதங்கள்
வறண்ட கண்ணீர் குளம்

தயைதண்ணீர் கேட்கும்
திராணியில்லை
நிழல்யாசகம் வேண்டும்
நினைப்பேயில்லை

யார் வந்தாலென்ன
யார் போனாலென்ன
நிற்காதிந்த பயணம்

அடுத்த அடி எடுத்து வைக்க
தீராத்தனிமை துணையிருக்கும்
உயிர்போன பின்னாலே ஓய்விருக்கும்

Sunday, December 28, 2014

பறத்தல்

முறிந்து விழப்போகும் 
கிளையொன்றைப் பிடித்து 
தொங்கிக் கொண்டிருந்தேன் 

நீ நினைத்திருந்தால் 
கை கொடுத்திருக்கலாம் 
மாறாக -
உன் கால்களை 
பிடிக்கப் பணித்தாய் 

விட்டு விட்டேன் 

தரை சேர்வதற்குள் 
எப்படியும் 
பறந்து விடுவேன்.


Friday, January 6, 2012

அப்பாவின் பெட்டி

பெரும்பாலும் உபயோகமில்லாத
பழைய தட்டுமுட்டு சாமான்கள் கிடக்கும் பரணில்
அப்பாவும் இருப்பது போல் தோன்றவே
தனிமையில் ஒருநாள்
அப்பாவின் பெட்டியை பரணிலிருந்து இறக்கினேன்.

திருமணக்கோலத்தில் அப்பா அம்மாவின்
கருப்பு வெள்ளை புகைப்படம்
உள்ளே செல்லரித்துக் கிடந்தது.
பழுப்பேறிய வேஷ்டி
பெரிய காலர் வைத்த சட்டை
அழகான கையெழுத்தில் நோட்டுப்புத்தகம்
சவரம் செய்யும் கத்தி
வெற்று மார்புடன் சிகரெட் புகைத்தபடி
முறுக்கிய மீசையோடு
இளமைக்கால அப்பாவின் ஆல்பம்
எல்லாம் சிதலமடைந்து
சவப்பெட்டியை திறந்தது போல் இருந்தது

எத்தனைதான் வெறுத்தாலும்
மேலேறிய முன் நெற்றியோடு
கண்ணாடியில் தெரியும்
என் முகத்தில்
அப்பாவின் அடையாளம் மிச்சமிருப்பது
ஆறுதலாயிருக்கிறது.


உன் குறுஞ்செய்தி

தடித்த வார்த்தையொன்று
நம்மிடையே வந்து விழ
இறுக்கமான முகத்தோடு
இல்லாத காரணம் சொல்லி
உன் அம்மா வீட்டிற்குப் போகிறாய்

போகட்டுமே என்றிருந்த பிடிவாதம்
இருநாட்களுக்குள் மூச்சடைத்துப் போனது

நீயில்லாத நம் வீடு
என் மீது கோபித்து முகம் திருப்பிக் கொள்ள
சூழ்ந்த வெறுமையில்
நிராயுதபாணியாய் நிற்கின்றேன்

சற்று பார்வை மங்கி
இலக்குகள் தெரியாத தடுமாற்றம்

நிலைகொள்ளாமல் தள்ளாடும் மனது
எங்கோ இருளில் முட்டி நிற்கிறது

இது போதாதென்று இரவெல்லாம்
மோகினிப்பேய்களின் அட்டகாசம்

அங்கென்ன நிகழ்ந்ததோ
ஒரு வழியாக மெளனம் கலைந்து
"சாப்டாச்சா" என்ற ஒற்றைச் சொல்லோடு
வந்து சேர்கிறது உன் குறுஞ்செய்தி

மடை திறந்த வெள்ளம் போல்
மீண்டும் நான் உயிர்த்தெழுந்து
தாயே உன் மடியில் விழுந்தேன்.

Wednesday, September 22, 2010

பேரமைதி

ஒரு கனி
இரு பசி
தெறிக்கும் இரத்தம்

எஜமானன்
அடிமை
இவன் அவனாக
அவன் இவனாக
உருளும் சரித்திரம்

ஒரு பூமி
பல்லுயிர்கள்
அரித்துக் கொண்டிருக்கிறோம்

பசியில்லாத உயிர்கள்
உயிர்களில்லாத பூமி
பூமியில்லாத பிரபஞ்சம்
பிரபஞ்சமில்லாத ஏதோ
பேரமைதியில்
இருந்திருக்கக் கூடும்

பிரபஞ்சம் எப்போது உருவானது
எங்கிருக்கிறோம்
என்ற கேள்வி எழுந்த போது - ஆக
கேள்வியே இல்லாத போதும்
அந்தப் பேரமைதி வாய்க்கக் கூடும்

Thursday, August 19, 2010

எல்லாம் சரியாக அமைந்தவர்கள்

எல்லாம் சரியாக அமைந்தவர்களின்
குடும்பப் புகைப்படத்தில்
அழகான மரவேலைப்பாடமைந்த நாற்காலிகளில்
மூன்று தலைமுறையினர்
கம்பீரமாக வீற்றிருக்கிறார்கள்
அங்கே காலியான அல்லது உடைந்துபோன
நாற்காலிகள் என்று எதுவும் இல்லை

முன்னறிவிக்கப்பட்ட திருப்பங்களோடு
பெரும்பாலும் நேர்கோட்டில் பயணித்து
சுபமென்று முடியும் கதையொன்று
அவர்கள் ஒவ்வொருவர் கையிலும்
வழங்கப்பட்டிருக்கிறது
அங்கே மரணம் கூட
எதிர்பார்க்கப்பட்ட வரிசையில்
நேர்த்தியான விசும்பலோடு நிகழ்கிறது

குளிரூட்டப்பட்ட இரயில் பயணத்தில்
தூக்கத்திற்காக இரவல் வாங்கிய புத்தகம் போல்
அவர்கள் வாழ்க்கைப் புத்தகத்தின்
பளபளக்கும் அட்டைப்பக்கம்
வாசித்துக் கொடுத்துவிடுகிறார்கள்

எதுவுமே சரியாக அமையாதவர்கள் தான்
கசகசக்கும் இரவொன்றில்
மங்கிய வெளிச்சத்தினூடே
களைப்பான கண்கள் கொண்டு
அத்தனை பக்கத்தையும்
படித்துத் தொலைக்கிறார்கள்.

Saturday, June 19, 2010

வெண்தாடிக் கிழவன்

கிழிந்த துண்டு போர்த்தி
தெருவோரம் சுருண்டு கிடக்கும்
இந்த வெண்தாடிக் கிழவன் -
எல்லோராலும்
புறக்கணிக்கப்பட்டவனா ?
அல்லது
எல்லோரையும்
புறக்கணித்தவனா ?

Thursday, June 3, 2010

இருட்டறை

இன்னமும் அச்சுறுத்துகிறது
மனத்தின்
இந்த இருட்டறை

எத்தனை வித்தைகள் கற்றாலும்
இந்த இருட்டு மட்டும்
கண்களுக்குப் பழகவே இல்லை

கிடைத்திருக்க வேண்டிய அரவணைப்பு
சின்ன சின்ன சந்தோஷங்கள்
நடுங்கும் விரல்களுக்கான பற்றுதல்
சில தவறுகளுக்கான மன்னிப்பு
காய மறுக்கும் கண்ணீர் துளிகள்
தொலைந்து போன பருவங்கள்
மறுக்கப்பட்ட கொண்டாட்டங்கள்
நேர்த்தியான புறக்கணிப்பு
துல்லியமான சில சிதைவுகள்

எரியாத சடலங்கள் இறைந்து கிடக்கும்
மயானத்தின் நெடிகொண்டு
மறைந்திருக்கும் என் இருட்டறை

இந்த தூரத்திலும் விழும் ஒரு பார்வை
இந்த ஆழத்திலும் சேரும் சிறு வெளிச்சம்
வரக்கூடுமென்றால்
நான் மன்னிக்கக்கூடும்
இந்த இருட்டறையை
எனக்குப் பரிசளித்தவர்களை

Sunday, May 9, 2010

ஒரு காதல் கதை

ஒரு பெண்
ஒரு ஆண்
அவள் உலகம்

ஒரு ஆண்
ஒரு பெண்
அவன் உலகம்

அவனும் அவளும்
சங்கமிக்கப் பணித்தாள்
ஒரு தேவதை

இரு உலகங்கள்
மோதிக்கொண்ட அதிர்ச்சியில்
அவர்கள் பிறகு மயக்கம் தெளிந்தார்கள்

அவள்
உடைந்த தன் உலகத்துண்டுகளை
தலையணைக்குள் புதைத்துக் கொண்டு
தேவதையை சபித்தாள்

அவன்
உடைந்த தன் உலகத்துண்டுகளை
வெறிகொண்டு
தேவதை மேல் விட்டெறிந்தான்

எல்லாம் தெரிந்த தேவதை
ஒரு குழந்தையை
அவர்களுக்குப் பரிசளித்தாள்

பிறகென்ன
அந்தக் குழந்தையே
அவர்கள் உலகமாகிப் போனது.

Tuesday, February 9, 2010

நினைவுகளை அணைத்தல்

ஒரு மின்விளக்கை
அணைப்பது போல்
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை
நினைவுகளை அணைப்பது.

என் உறக்கத்தடமெங்கும்
குதிரைக்குளம்பொலியாய்
ஒலித்துக் கொண்டேயிருக்கும்
இந்த நினைவுகளை
இறுக்கிப் பிடித்து நிறுத்த
இரவின் வீதியெங்கும்
அதன் பின்னலைகின்றேன்.

நினைவுகள்
எண்ணங்களைப் பிறப்பிப்பதும்
எண்ணங்கள்
நினைவுகளைத் திசைதிருப்புவதுமாக
தொடரும் உங்கள் விளையாட்டை
வேடிக்கை பார்ப்பதைத் தவிர
வேறொன்றும் வழியறியாத நான்
ஒன்று மட்டும் உங்களைக் கேட்கின்றேன் -

ஒரு மின்விளக்கை
அணைப்பது போல்
மிகஎளிதாக இந்த உடல் அணையும் போது

எந்தத் திருவடியில் விழுந்து
நீங்கள் செத்தொழிந்து போவீர்கள்?

Sunday, December 27, 2009

அம்மாவைக் காணக்கிடைத்தல்

நினைவு தெரிந்த நாள் முதலாய்
எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும்
அம்மாவைத் தான் பார்த்திருக்கிறேன்

'கழுத்தில் மாலை விழுந்த நாளிலிருந்து'
இந்த ஓட்டம் தொடங்கியதாக
அம்மா நினைவுகூர்வதுண்டு
கண்ணீரோடும்
சில நேரம் சிரிப்போடும்

இன்று அவள் சுமைகளை இறக்கி
கைத்தாங்கலாக
இரயிலில் இருந்து அழைத்து வந்து
குளிருக்கு கம்பளி போர்த்தி
பகல்நேரம் அயர்ந்து உறங்கும்
அம்மாவைக் காணக்கிடைத்திருப்பது
ஆறுதலாக இருக்கிறது

பயமாகவும் இருக்கிறது

Monday, December 7, 2009

பைத்தியக்காரன்

திட்டங்கள் தீட்டி
வியூகம் வகுத்து
நேர்த்தியாய் பேசி
நேரம் பார்த்து தாக்கி
வேண்டிய அளவு குழைந்து
இடம் பார்த்து குரலுயர்த்தி
தேவைக்கேற்ப  விடுத்து எடுத்து
பட்டும்படாமல் முன்னகர்ந்து
சிரிப்பில் சமாளித்து
பரிசுத்தமான பிம்பம் பொருத்தி
நீங்கள்
வெற்றி மகுடம் சூடிக் கொண்டீர்கள்.

நானோ
வெறும் பாசம் கொண்டலைந்து
பைத்தியமானேன்.

Monday, November 23, 2009

வேறுபாடு

விரும்பியதெல்லாம்
கிடைத்து விடுகிறது
என்றாவதொரு நாள்.

விரும்பிய போதே
கிடைத்து விடுவதில்
வேறுபடுகிறது
உன் வாழ்க்கையும்
என் வாழ்க்கையும்.

Wednesday, November 18, 2009

சுகித்தல்

இந்த
மண் போல்
மரம் போல்
கிளை போல்
இலை போல்
மலர் போல்
சுகிக்க வேண்டும்
மழையை.

Saturday, October 24, 2009

கலையும் கவிதைகள்

வட்டத்துக்குள் உத்வேகத்துடன்
ஓடத் தொடங்குகிறேன்
எல்லோரும் பயணிக்க
இதோ உருண்டோடும்
என் வாழ்க்கை

சற்று கண்ணயர சாய்ந்தவனை
ஓங்கி முதுகில் அறைந்து
உலுக்கும் யதார்த்தத்தில்
ஏதும்
குறையொன்றுமில்லை
குறையொன்றுமில்லை

என்றாலும்
ஒரு கவிதைக்கான தருணங்கள்
இப்போதெல்லாம்
மிக எளிதாகக் கலைவதில்
சிறிது வருத்தம் தான்

என்றாலும்
அதனால் ஏதும்
குறையொன்றுமில்லை
குறையொன்றுமில்லை.

Wednesday, September 2, 2009

தூக்கம் எனும் வரம்

"நான் தூங்கப்போறேன்பா"
சொன்ன இரண்டாம் நிமிடத்தில்
பூப்போல்
உறங்கிவிடுகிறாள் மனைவி.

ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தவன்
"என்ன இரகசியம்பா"
என்று ஒருநாள் கேட்டேன்.

"மனசை லேசா வச்சுக்கணும்
மண்டைல நிறைய போட்டு குழப்பக்கூடாது
அப்புறம் இதுமாதிரி தூங்கறவங்கள பார்த்து
கண் வைக்கக் கூடாது" என்று சிரித்தாள்.

அன்றைய இரவும்
உலகத்தை எடுத்துக் கொண்டு
என்னிடம் வந்து படுத்தேன்.
ஒரு கட்டத்தில்
மனதை லேசாக வைத்திருப்பதைப் பற்றி
தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினோம்.

பூப்போல் மனைவி
உறங்கிக் கொண்டிருந்தாள்.