Showing posts with label சு.ரா.. Show all posts
Showing posts with label சு.ரா.. Show all posts

Wednesday, April 4, 2007

எ.பி.சு.ரா.க - 6

ஒரு கவிதையை எப்போது நமக்குப் பிடிக்கின்றது ? நாம் உணர்ந்ததையே அது அழகான வார்த்தைகளில் விளக்கிச் சொல்லி நம்மோடு தோழைமை பாராட்டும்போதா ? நாம் இதுவரை அறிந்திராத ஒன்றை அது உணரத்தரும்போதா ? இல்லை சதா நம்முள் அழுத்திக் கொண்டிருந்தாலும் என்னவென்றே நம்மால் இனம் காணமுடியாத ஒன்றை இது தான் அது என்று உருவம் தந்து நம்முன் நிறுத்தும்போதா ? ஏதோ காரணத்தினால் சுந்தர ராமசாமியின் உருக்கமான, தலைப்பில்லாத இக்கவிதை மனதைத் தொட்டது.

~~~~~~~~
என் துக்கத்திற்கு விடுமுறை இல்லை என்பதறிவேன்
இருப்பினும் அது சற்றுத் தூங்கினால்
நானும் சற்றுத் தூங்க முடியும்
அதன் விழிப்பு என்னை வதைக்கிறது
சற்று விட்டுப் பிடி என்று சொல்லவும் எனக்குத் தெரியவில்லை
இருந்தாலும் இப்போதும் சிரிக்க முயல்கிறேன்

என் துக்கத்திற்கு விடுமுறை இல்லையென்பதை உணர்ந்துவிட்டேன்
இருந்தாலும் அது சற்று ஓய்வெடுத்துக் கொண்டால்
அந்நேரம் நானும் ஓய்வெடுத்துக்கொள்ள முடியும்
தூங்கினால் நானும் தூங்க முடியும்
இருப்பினும் சிரிக்க முயல்கிறேன்
சில சமயம் வெளியே போகிறேன்
இனம்கூற முடியாத ஏதோ ஒன்று நெற்றிப்பொட்டை
சதா தாக்கிக்கொண்டிருக்கிறது
சுமை களைந்து நிற்க மனம் ஏங்குகிறது
மாலையில் சூரியன் மறையும்போது
தனி அறையில் அமர்ந்திருக்கிறேன்
இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்கிறேன்
என்னைத் தவிர இங்கு வேறு எவருமில்லை
எனச் சொல்லிச் சிரிக்கிறது துக்கம்.
- சுந்தர ராமசாமி, 24.1.1995
~~~~~~~~~

Monday, April 2, 2007

எ.பி.சு.ரா.க - 5

சுந்தர ராமசாமியின் இக்கவிதையைப் படிக்கும் போதெல்லாம் மனதும் உடலும் பறக்கத் துடிக்கின்றன.

=================
பறக்கத் துடி
=================
இன்னுமா நீ பறக்கவில்லை ?
விரித்த சிறகுகளும்
தணிந்த முன்னுடலும்
தொட்டும் தொடாமல்
மேலெழுந்து நிற்கும் கால்களுமாய்
உன்னை வடித்திருக்கும்
அந்தச் சிற்பியின் அந்தரங்கம்
இன்னுமா உனக்கு எட்டவில்லை ?
நீ அமர்ந்திருக்கும் அந்தக் கல்தூண்முன்
அகன்ற முற்றத்தில்
காலம் காலமாய் வந்திறங்கி
தம் அசைவுகளிலும் நளினங்களிலும்
சோபைகளை வாரியிறைக்கும்
புறாக்களின் சுதந்திரத்தைக்
கண்ணாரக் கண்ட பின்னுமா
சிறகை விரித்து
பாதம் உயர்த்தி
பறக்கத் தயங்கி
நின்று கொண்டிருக்கிறாய் ?

சிறிது சிந்தித்துப் பார்
உன் இனம்போல் நீயும்
வானத்தில் வட்டமிட வேண்டாமா ?
உனக்கும் தான் இருக்கின்றன
அவைபோல் சிறகுகள்
உடற்கட்டில் துல்லியம்
இதைவிடவா கூடும்.
உயிரா ?
உள்துடிப்பில் இருந்துதானே பற்றிற்று
உயிரின் பொறி
கல்தானே கனலாயிற்று
பறக்கத் துடி
துடி துடி துடி
பற்றும் உயிர்.
- சுந்தர ராமசாமி, நவம்பர் 1993

Saturday, November 4, 2006

எ.பி.சு.ரா.க - 4

=============================
கதவைச் சுண்டாதே தயவுசெய்து
=============================
நான் இங்கு இருக்கிறேன்.
இங்கு இச்சிறிய அறையில்.
சிறிய சன்னல் சிறிது வெளிச்சம்.

தயவுசெய்து உன் ஆள்காட்டி விரலின் நகத்தால்
சாத்தியிருக்கும் என் கதவைச் சுண்டாதே
எனக்கு உன் ஓசைகள் தெரியும்
உன்னைத் தெரியும்
உன்னிடம் எவ்வளவு என்பதும் தெரியும்.

என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில் வரியைக் கட்டக் கடைசி நாள் கேட்பாய்
பங்குகள் சரிவதுபற்றி விசனமுடன் பேசுவாய்
தொலைபேசி எண் என்ன என்பாய்

கையாலாகாதவன் என என்னைச் சொல்லாமற் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும்பாரம்

சரித்துவிட்டுப் போவாய்
"ஒரே ஒரு கவிதை"
போதும் இந்த ஜென்மம் பொருள்பட

என்பது என் நம்பிக்கை
அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரலின் நகத்தால்

என் கதவைச் சுண்டாதே
தயவுசெய்து.

- சுந்தர ராமசாமி 1985


பிரமிக்க வைக்கும் தூய்மையான உறுதியான நம்பிக்கை. இந்த கவிதையை சு.ரா. எழுதிய போது அவருக்கு வயது 54 இருக்கும். 27 வயதில் இப்படியெல்லாம் நான் கவிதையில் நம்பிக்கை வைத்தால் என் வீட்டில் தலையில் குட்ட வருவார்கள் :)) so இந்த கவிதை தரும் செய்தியை let me generalise - "have passion for your work, no matter what".

Saturday, September 23, 2006

எ.பி.சு.ரா.க - 3

இன்னொரு சு.ரா. கவிதை.

==============
கடல் சிரித்தது
==============
கல்லும் பிராணன் இழுத்து
மேலெழுந்து பறந்தது.

அலைகள் பாதம் முளைத்துக்
கரையேறி வந்தன.

திசுக்கள் பரிணமித்து
வேதங்கள் கோஷித்தனர்.

மூளைச் சுடரின் அங்குசம்பட்டு
பிளிறி எழுந்தன யானைகள்.

மின்னலும் மழையும்
பின்பக்கம் நின்றன.

அத்தனையும் முடிந்து
ஒரு விசும்பல் எழுந்தது.

ஏன் என்றது வானம்.
நான் யார் என்று கேட்டது
மண்ணில் ஒரு குரல்.
கடல் சிரித்தது.

- சுந்தர ராமசாமி 1975

Monday, September 4, 2006

எ.பி.சு.ரா.க - 2

எனக்குப் பிடித்த சுந்தர ராமசாமி கவிதைகளுள் அடுத்தது -
நம்பிக்கை பற்றி ஒரு simple and straight forward kavidhai.

=========
நம்பிக்கை
=========
தூரத்தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.

வேறு யாரோ.

அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.

Saturday, September 2, 2006

எ.பி.சு.ரா.க - 1

எனக்குப் பிடித்த சுந்தர ராமசாமி கவிதைகளுள் இது ஒன்று.

-----------------
இந்த உலகம்
-----------------
வானம் வந்திறங்கும்போது இளைப்பாற
மேகத்தால் ஒரு கட்டில் செய்தேன்
காலை இளங்கதிர்களைக் கூட்டி
அவற்றின் ஓளியால் இசை செய்து
கட்டிலின் அருகே வைத்தேன்
விண்மீன்களை அள்ளியெடுத்து
தெருவெங்கும் இறைத்து வைத்தேன்.

கடுந்தவத்தின் முடிவில்
வானம் வந்திறங்கிற்று
சயனிக்க வேணும் என்றேன்
கழிப்பறை எங்கே
என்று கேட்டது வானம்.

- கொல்லிப்பாவை அக்டோபர் 1985
(சுந்தர ராமசாமி கவிதைகள் ப-99)

இதை மிகமிக ஆழமான கவிதையாக உணர்ந்தேன். கவிதை விவரிக்கும் தளம் ஒன்றாக இருக்க, அதில் பயணித்து அங்கு பார்த்ததை, உணர்ந்ததை நடைமுறை வாழ்வின் பல பக்கங்களில் பொருத்திப்பார்க்க முடிகிறது. அப்படி செய்யும் போது கவிதையின் அர்த்தம் இன்னும் ஆழமாகிக்கொண்டே போவதை உணரமுடிகிறது. கவிதையின் தலைப்பு அதன் அர்த்தத்தை கண்டுபிடிக்க வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. இப்படி எழுத வேண்டும் என்று ஆசை. இன்னும் எத்தனை வயதாகுமோ தெரியவில்லை.