Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts

Tuesday, December 5, 2006

வெளிச்சம் தேடும் வேர்கள்

பிறந்த கணத்திலிருந்தே
ஆழமான இருள்வெளியில்
திசை தெரியாத பயணம்.

மண்படிமங்கள் குடைந்து
பாறைகள் மோதி
நம்மை நூறாய் கிழித்துக் கொண்டும்
விதித்த வழியே தொடர்ந்தோம்.

வெறுமை இறுக்கத்தின்
வியர்வை கசகசப்பில்
நாம் முடங்கித் தவித்திருக்க
நம்மின் மறுபாதியோ
வான்முட்டக் கிளைபரப்பி
பூமணத்தின் கிறக்கத்தில்
தென்றலோடு சல்லாபித்திருக்கிறது.

இனி பொறுப்பதில்லை.
ஒன்றுகூடி முட்டிமோதி
பூமிபிளந்து வெளிப்புறப்பட்டன
வேர்கள்.

பேரிரைச்சலோடு
சரிந்து விழுந்தது
மரம்.

/6th Dec, 2006

Thursday, November 30, 2006

தலைமுறை

வாழ்த்துக்கள்.
பூங்காற்றில் தலையசைக்கும் பூக்களெல்லாம்
புயற்காற்றில் வேரழியும் விபரமேதும் அறியாமல்
என் கவசங்களைக் கொடுத்துவிட்டு
கைமுறுக்கு வாங்கிக் கொறித்தபடியே
இராட்டினம் பார்த்துக் கிறுகிறுத்து
நிராயுதபாணியாய் நின்றிருந்த என்னை
சரிவுகளின் கீழே இருண்ட பள்ளத்தில்
ஆக்ரோஷமாய் வீழ்த்திக்கொண்டமைக்கு
வாழ்த்துக்கள்.

என்மீது கவிழ்ந்துவிட்ட இருள்வெள்ளம்
கண்ணீர் கசிந்த வழியே
உள்ளேயும் புகுந்து நிறைக்க
அருவருத்து கூனி குறுகி சிறுத்து
மூச்சுத்திணறி மூழ்கத்தொடங்கி
முழுமையாய் மரணித்தாலும்
கரையொதுங்கிய என் சவத்தை
தோளில் சுமந்தபடியே நான் எழுந்து நின்றது
நாக்குச்சவுக்கை சொடுக்கிக்கொண்டே
எங்கிருந்தோ நீ கொக்கரிக்கும் ஓசையில் தான்.

என் ஆற்றாமையின் கேவல்கள் அடங்கி
உள்ளெரியும் தீயில் விழிகளுக்கு ஒளியூட்டி
புலன்களெல்லாம் கூர்மையாக்கி
சலனங்களின் ஆணிவேர் அறுத்து
வெளிப்பூச்சின் பின்நெளியும் புழுக்கள் கண்டறிந்து
கவனமாய் இரண்டடிகள் நான் எடுத்து வைக்க -
உன் திகைப்பை மறைத்துக் கொண்டு
என் உடலெங்கும் அப்பிக்கிடக்கும் தழும்புகளையும்
காய்த்துப்போன என் கைகளையும்
விகாரம் எனச்சொல்லி மகிழ்கிறாய்.

நன்று, இன்னும் சற்றுப்பொறு.
என் பரிபூர்ணத்தின் ஒளிப்பிழம்பில்
உதித்து வரும் தலைமுறை
வாள் உருவும் ஓசையில்
உன்னதுதன் பின்னங்கால் பிடரிபட
தெறித்து ஓடக் காண்பாய்.

/30th Nov, 2006.

Sunday, October 8, 2006

கவிப்பயன்

இதனால் அறியப்படுவது யாதெனின்
இன்றைய தேதியில் கவிதைகளால்
வேறொன்றும் பயனில்லை.

தன் அதிமேதாவித்தனத்தை
பிரகடனம் செய்து
எழுதும் ஒவ்வொரு எழுத்தையும்
காகிதப்பணமாய் பண்டமாற்றும் வித்தை
கைவரப் பெற்று
பக்கம் நான்கு வரிகள் நிறைத்து
புத்தகம் பத்து வெளியிட்டு
மொழியைப் பிழிந்தெடுத்து
பட்டங்கள் சூடிக் கொண்டு
காதலர்கூட்டத்தின் கரகோஷம் பெற்று
அதில் கயல்விழிப் பெண்ணொருத்தி
கையொப்பம் கேட்காமற் போனால்

இன்றைய தேதியில் கவிதைகளால்
வேறொன்றும் பயனில்லை.

இந்த சப்தங்கள் எட்டாத தூரத்தில்
மனத்தின் இருட்டறையில் காயங்கள் சுமந்து
சுருண்டு கிடந்தவனை
பாந்தமாய் தொட்டெழுப்பி
சன்னலொன்றைத் திறந்து வைத்து
வானமாய் விரிந்து கிடந்தது
ஒரு கவிதை.

/8th Oct, 2006

Saturday, September 16, 2006

தேடல்

நான் வாழும் தெருவின் மூலைமுடுக்கெல்லாம்
எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கின்றன
அதரப்பழசுமாய் புதுச்சாயம் பூசிக்கொண்டதுமாய்
பலப்பல அடையாளங்கள்.

வசீகரிக்கும் அந்த அடையாளங்களின் பின்னே
முண்டியடித்துப் பலரும் ஒளிந்து கொள்ள
சேர்ந்த ஆள்பலத்தில் மிகுந்த இறுமாப்போடு
அவை மார்தட்டிக் கொள்ளும் ஓசையில்
எங்கள் தெருவே அதிர்ந்தது.

"எல்லாம் சரி தான் ஐயா - உங்கள்
அர்த்தம் எங்கே - அதன்
ஆழம் எங்கே - அங்கு சுரக்கும்
அமைதி எங்கே - அதில் பிறக்கும்
அழகு எங்கே?" - எனக்கேட்டதும்
வழிந்த சாயத்தை துடைத்துக் கொண்டு
முகம் சுளித்த அந்த அடையாளங்கள்
கோபம் கொண்டு கோரைப்பல் காட்டி
எனை விரட்டியடித்தன.

இப்போதெல்லாம் கவனமாய் தேடுகிறேன் -
உள்ளே கோரைப்பல் இல்லாத அடையாளங்களையும்,
அடையாளம் கூட வேண்டாத
கம்பீரமான அர்த்தங்களையும்.

/16 Sep, 2006

Saturday, September 2, 2006

முட்பூக்கள்

- 1 -

அவன் என்னை கவனித்தான்.

மானிடத்தூசு தட்டி
புவி வீட்டைப் புதுப்பித்தேன்
பூத்திட்ட பூங்காடாய்
அதையெங்கும் நிறைத்திட்டேன்
நிறைத்திட்ட இடமெல்லாம்
நிறைந்து நிற்கும் -
என் ஆசைகள்.

பூக்களே பூக்களே
நீங்களாய் நானிருப்பேன்

உம்மோடு விளையாடும்
பூங்காற்றாய் தலையசைப்பேன்
உள்ளுக்குள் உயிரோடு
வாசமாய் வசித்திருப்பேன்
நாணித் தலைகுனியும்
இதழ்களாய் சிவந்திருப்பேன்
வியர்வையாய் உருண்டோடும்
பனித்துளியாய் குளிர்ந்திருப்பேன்
சிதைகின்ற நனைகின்ற
வேர்களாய் மணத்திருப்பேன்

பூக்களே பூக்களே
நீங்களாய் நானிருப்பேன்

இதழங்கம் நோகாமல்
அழகொன்றும் நோகாமல்
பூவண்ணம் கோர்த்தெடுத்து
புதுச்சிறகு செய்து கொண்டேன்
என்னோடு கட்டிக் கொண்டேன்

என் சிறகுகள் படபடக்கும்
ஓசையில் விழித்துக்கொண்ட வானம்
தன் நீள அகலங்களை
தோல்விப்பார்வை பார்க்க
விரிகின்றேன் நான்
விரிகின்ற திசையெல்லாம்
விரிந்து நிற்கும் -
என் ஆசைகள்.

அவன் என்னை கவனித்தான்.


- 2 -

புதுவானில் பூச்சிறகோடு
உயரப்பறந்திட்டேன் நான்.
அவன் தனக்கான
வேளை வந்து போல்
வேகமாய் இயங்க ஆரம்பிக்க
மறுகணம் -

துளித்துளியாய் என் மீது
ஏதேதோ தெறித்து விழ -
என்ன இது என்ன இது
சிறகுகள் வேர்க்குமா?
வேர்க்கிறதே..

சுமையாக என்மீது
ஏதேதொ வந்தழுத்த -
என்ன இது என்ன இது
பூக்கள் கனக்குமா ?
கனக்கிறதே..

தாழப்பறந்து
மொத்தமும் கிறுகிறுத்து
சிறகுகள் கிழிபட
முட்காட்டில் விழுந்திட்டேன்.

காண்கின்ற காட்சியாக
காய்ந்திருக்கும் முட்கள்
மெல்ல என் விழிகளுக்குள் ஊடுருவ
தாளாமல் இமை மூடுகின்றேன்.

நெஞ்சத்தின் ஆழத்தில்
உயிர்த்திருந்த பூக்கள்
மெல்ல மேலெழுந்து
என் விழிகளுக்குள் உறுத்த
தாளாமல் இமை திறக்கின்றேன்.

உள்ளிருந்தும் வெளியிருந்தும்
உயிர் வதைக்கும் வலிகளே
படைத்தும்மை அனுப்பி வைத்து
இரசித்திருக்கும் மூடன் யார் ?

தேடுகிறேன் தேடுகிறேன்
முகங்காட்டா எதிரியவன்
முழுவுருவம் தேடுகிறேன்
தேடித் தொலைந்த போது
தோற்றது தெரிந்தது.

தன் வேலை முடிந்ததென
அவன் சிரித்துக் கொண்டான்.


- 3 -

என் பூக்களெல்லாம்
முட்காட்டில்
இதழ்களாய் கிழிபட்டு
சிதறிக்கிடக்க -
சொல்லிக் கொள்கிறேன் -
"துயிலுக துயிலுக
பூவென்றும் இதழென்றும்
கண்டு சொன்ன உணர்வுகளே
துயிலுக !
முள்ளென்றும் வலியென்றும்
உணர்த்துகின்ற உணர்வுகளே
துயிலுக ! "

ஒரு சின்ன துடிப்போடு
என் உணர்வுகள்
அடங்கிப் போகின்றன
எழுகின்றேன் நான்.

அவன் சந்தேகம் கொண்டவனாய்
மீண்டும் என் முன்னே கிழிந்திட்ட
பூக்களைப் பரப்பி வைத்தான்.

ஞாபகார்த்தமாய்
அவன் பூக்களை அள்ளிக்கொண்டு
அவன் முட்களை அள்ளிக்கொண்டு
என் பாதையில் நான் பயணித்தேன்.

அவன் வேலை முடிந்ததென
நான் சிரித்துக் கொண்டேன்.

/2000

Friday, August 18, 2006

காய்ந்த சுவடுகள்

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை


பாறை உயிரற்றது
பாலை மணல் உயிரற்றது
காய்ந்த முட்களும் உயிரற்றவை
பிணங்களே பாதையானால்
மனங்களுக்கு மதிப்பேது ?

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை

என் கண்கள் கரைந்திருக்கின்றன
என் கால்கள் தளர்ந்திருக்கின்றன
என் கைகள் காற்றில் வெறுமனே துழாவுகின்றன
என் இதயத்துடிப்பை அடிக்கடி நானே
சோதித்துப் பார்க்கிறேன்

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை

என் உயிர் வலிக்க ஒப்புக்கொள்வேன்
ஆனால் -
நான் சிரித்தாலே மலர்ந்து விடும்
என் தோட்டப்பூக்கள்
பொசுங்கி விடப் பொறுப்பதெப்படி ?
பொறுத்தேன்

பாதத்தின் மென்மை
பாதைக்குப் புரிவதில்லை

பாறையில் கால் இடறி
பாலையில் விழுந்தேன்
விழுந்த இடமெல்லாம்
காய்ந்த முட்கள்
என் ஆறறிவில் ஓரறிவு
இடம் பெயர்ந்து போனது - பாறையால்.
என் சிறகுகளெல்லாம்
சருகாயின - பாலையால்.
என் இதயத்தின் எல்லா அறைகளும்
அறுபட்டு போயின - முட்களால்.
பிணமானேன் நான்,
பிணங்களால் நான் பிணமானேன்.

எழுந்துவிட முயற்சித்ததுண்டு - ஆனால்
எழும்போதெல்லாம் வீழத்தான் வேண்டுமென்றால்
வீழும்போதெல்லாம் உயிர்கொண்டு எழுவானேன் ?
பிணமாய் கிடந்தேன்

திடீரென்று -
ஒரு பாதம் என் மீதேறிச் சென்றது
எதிர்பார்க்கவே இல்லை -
என் உடலெங்கும்
இரத்தச் சுவடுகள்

சுவடுகளின் சொந்தக்காரன்
சுருக்கமாய் சொன்ன வார்த்தைகள் -
"கரைகின்ற கண்களுக்கு
காட்சிகள் தெரிவதில்லை.
நிமிர்ந்து நில் - உலகம் தெரியும்.
தெளிந்து நில் - உலகம் புரியும்"

ஏதோ புரிந்தது போல் எழுகிறேன்
மீண்டும் அழுகிறேன் - ஆனால்
இம்முறை எழுகின்ற கண்ணீரை
இதயத்துள் சேமிக்கின்றேன்.
ஆதலின் தெளிவான கண்கள்.

என் முன்னால் பார்க்கிறேன்
தூரத்துப் பச்சை தெளிவாய் தெரிகிறது.
ச்ற்றே திரும்பிப் பார்க்கின்றேன் -
என் கால் இடறிய கற்களெல்லாம்
கற்சிலைகளாய் உருப்பெறுகின்றன.
என் பாலை மணல் முகடு
நிலா மழையில் நனைகிறது.
என் முட்களைச் சுற்றியெங்கும்
முகம் மலர்ந்த ரோஜாக்கள்.

என் நெஞ்சத்தின் ஆழம் வரை
அப்பிக்கிடந்த ஈரச்சுவடுகள்
காய்ந்திருந்தன.
இதோ தயாராகி விட்டது -
இன்னொரு இரத்தச் சுவடு.


/1997

Notes:
If I remember correctly, this is my first kavidhai. It wasn't easy :)

Tuesday, August 15, 2006

கனவுகள் தேவை

நிஜம் - ஒரு முரடன்
அவன் வலியவன்

நான் சிரித்தால்
அவன் சொக்கிவிடப் போவதில்லை
நான் அழுதால்
அவன் கரைந்துவிடப் போவதில்லை
அவன் - ஜடம்.

நான் விரும்பி
அவனை அழைத்ததில்லை
நான் விரும்பினாலும்
அவன் போவதில்லை
அவனை போகச் சொல்லியும் பயனில்லை
அவன் - செவிடன்.

சாதுவைப் போல் என்னிடம் நடிப்பான்
கைபிடித்தென்னை அழைத்துச் செல்வான்
பூக்களைக் காண்பிப்பான்
என் மனதை இழுத்து வந்து
அதன் மேல் இருத்தி வைப்பான்
சில நாழிகை கூட கழிந்திருக்காது
எங்கிருந்தோ முள்ளெடுத்து
பூக்களைக் கிழித்தெறிந்து
"போகலாம் வா" என்பான்.

ஏதேதோ எடுத்து வந்து
எல்லாம் என்னிடம் தருவான்
எனக்கும் சிறகுகள் கொடுத்து
வானத்தை விரித்து வைப்பான்
மறந்தும் நான் சிரித்து விட்டால்
என் விழிகளுக்கு சுமை கொடுத்து
உரக்கக் கூச்சலிடுவான்.

அவன் மூடன் -
எனைத் தோற்க வைப்பான்.
துவண்டு நான் கிடக்கையிலே
மீண்டும் எனைத் தோற்க வைப்பான்.

உணர்வுகள் ரணமாயின
மருத்துவனாய் நடித்தான் -
வடு கூட வலி சொன்னது.

எத்தனை நாள்,
இன்னும் எத்தனை நாள் இவனோடு ?
முடிவெடுத்தேன்
நிஜத்தை என் எண்ணம் போல் செதுக்கி
சின்னச் சின்னக் கனவுகளில்
நிறைத்து வைத்தேன்.
கனவுகளைப் ப்ற்றிக் கொண்டேன்.

நிஜத்தோடு போராட
நிஜத்தோடு போராட
இன்னும் கனவுகள் தேவை.

/1999

இருத்தல்

உயிர்த்திரு உணர்வே உயிர்த்திரு
காலின் கீழே உலகம் நழுவும்
விரித்தால் உதிரும் இருகைச் சிறகும்
விழிநீர்த்திரளாய் விழியும் வழியும்
கைப்பிடி பொருளும் காற்றில் கரையும்
நிலையில் மருண்டு நினைவும் துவளும்
இருந்தும் நீயும் -
உயிர்த்திரு உணர்வே உயிர்த்திரு!

பொறுத்திரு மனமே பொறுத்திரு
கனவைக் கொளுத்தி காலம் சிரிக்கும்
விடியும் பொழுதும் இரவாய் தொடரும்
உதறும் உள்ளம் உறவாய் இருக்கும்
நினைவுப்பையை முட்கள் நிரப்பும்
உன்னைச் சிரிக்கும் ஊரும் பேரும்
இருந்தும் நீயும் -
பொறுத்திரு மனமே பொறுத்திரு!

விழித்திரு உயிரே விழித்திரு
நீ சொன்னால் மட்டும் உலகம் சுழலும்
விடுக்கும் வார்த்தை தலையாய் அசையும்
ஊரைக் கூட்டி மேடை மெச்சும்
உறவால் வீட்டின் அறைகள் நிறையும்
பூக்கள் சூழ்ந்து இனிக்கச் சிரிக்கும்
இருந்தும் நீயும் -
விழித்திரு உயிரே விழித்திரு!

/2004

Monday, August 14, 2006

இளமைக் கனவுகள்

நித்தம் நடத்தும் வாழ்க்கைப் போரில்
காகிதப் பணத்தை
ஜெயிப்பதற்கே
போரிட்டு மடிகின்றன -
என் எல்லா நேரங்களும்.

தப்பிப் பிழைத்த
சில நிமிடத்துளியில்
போர்க்கள ஓலம் துறந்து
அமைதிக்காய்
மனது தவிக்கையில் -

ஓடி வந்து
என் மார்பில் சாய்ந்தபடி
தேம்பி அழுகின்றன -

என் இளமைக்கால
இனிமைக் கனவுகள்.

/2002

நன்றியுரை

நன்றி என் நண்ப,

உணர்வோடு ஒட்டாத
வெறும் சப்தங்களையே
வார்தைகளாய் நம்பி
நான் தலையசைத்துக்
கிடந்த போது -

நீ தான் நீ தான்
கற்றுத் தந்தாய்

சில ஆழமான மௌனங்களின்
அழுத்தமான வார்த்தைகளைப்
புரிந்து கொள்ள.

நன்றி என் நண்ப,

யாரோ தந்த தொடக்கத்தில்
காற்றிலே வரைந்ததையெல்லாம்
கனவிலே
நான் வைத்த போது

நீ தான் நீ தான்
உணரச் செய்தாய்

என் ஓலைக்குடிசை வழியே
ஊடுவி வந்து விழும்
ஒற்றை ஒளிக்கற்றையின்
வெப்பத்தை.

நன்றி என் நண்ப,

பூக்களையே பார்த்துப் பார்த்து
அழகை நான்
வியந்த போது

நீ தான் நீ தான்
காணச் செய்தாய்

ஏதோ ஓர் ஆழத்தில்
எங்கோ முடியும் பயணத்தில்
தன்னைச் சிதைக்கும்
வேர்களின் வியர்வையை.

நன்றி என் நண்ப,
நீ தான் என் சொந்தம்
நீ தான் என் சொத்து
உன் பெயர் -
சோகம்.

/1999